தண்டவாளத்தில் படுத்தபடி செல்பி எடுத்து கொண்டு காதல் ஜோடி தற்கொலை - ஆம்பூர் அருகே பரபரப்பு
ஆம்பூர் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் படுத்தபடி செல்பி எடுத்து கொண்டு தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடியால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜோலார்பேட்டை,
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தை அடுத்த பூங்குளம் புதூரை சேர்ந்தவர் உமாபதி. இவரது மகள் நந்தினி (வயது 22). இவருக்கும் பச்சூரை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் 3 மாதத்தில் கணவரை பிரிந்து நந்தினி பெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.
குடியாத்தம் அருகே சாமரிஷி குப்பம் கிராமத்தை சேர்ந்த கோதண்டன் என்பவரின் மகன் ராமதாஸ் (29). ஓசூரில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். ராமதாசுக்கும், நந்தினிக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ராமதாஸ், நந்தினியை திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்ததாகவும், இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் காதல் ஜோடி நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி ஆம்பூர் பகுதியில் சுற்றி திரிந்தனர். இரவு ஆம்பூர் - பச்சகுப்பம் இடையே உள்ள தார்வழி ரெயில்வே தண்டவாள பகுதிக்கு சென்றனர். தண்டவாளத்தின் அருகே அமர்ந்து காதல் ஜோடி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்தபடி செல்போனில் செல்பி எடுத்தனர்.
அப்போது வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் அவர்கள் மீது மோதியது. இதில் உடல் துண்டாகி 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
நேற்று காலை தண்டவாளத்தில் காதல் ஜோடி பிணமாக கிடந்ததை கண்ட பொதுமக்கள் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி மற்றும் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம் ஆகியோர் வந்தனர். சம்பவ இடத்தில் இருந்த செல்போனை மீட்டனர். அதில் காதல்ஜோடி செல்பி எடுத்த படம் பதிவாகி இருந்தது.
இதுதொடர்பாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காதல் ஜோடி செல்பி எடுத்து கொண்டு தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.