விருத்தாசலம் அருகே கிணற்றில் மூழ்கி சகோதரிகள் 3 பேர் பலி தாய் கண் எதிரே நிகழ்ந்த பரிதாபம்

விருத்தாசலம் அருகே கிணற்றில் மூழ்கி சகோதரிகள் 3 பேர் பலியாகினர்.

Update: 2020-03-20 23:54 GMT
சிறுபாக்கம், 

தாய் கண் எதிரே நிகழ்ந்த இந்த பரிதாப சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

பிறந்த நாள் விழா

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் செஞ்சிபள்ளிபில்லான்குப்பத்தை சேந்தவர் மணிகண்டன்(வயது 40), கூலி தொழிலாளி. இவருக்கு ஸ்டெல்லா(33) என்ற மனைவியும், சுவேதா(14), நிவேதா(11), சுஜாதா(8) ஆகிய 3 மகள்களும் உள்ளனர். மணிகண்டன் தனது மனைவியுடன் பெங்களூருவில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். மகள்கள் 3 பேரும் தர்மபுரி அடுத்த நல்லாண்பள்ளிகோவிலூர் என்ற ஊரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தங்கி, முறையே 8, 5, 3-ம் வகுப்புகள் படித்து வந்தனர்.

இந்த நிலையில் ஸ்டெல்லா தனது மகள்களுடன் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சிறுபாக்கம் அடுத்துள்ள மலையனூரில் உள்ள உறவினர் ஒருவரின் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி பெங்களூருவுக்கு பள்ளி விடுமுறையில் வந்திருந்த தனது 3 மகள்களையும் அழைத்துக் கொண்டு பிறந்தநாள் விழாவில் பங்கேற்க ஸ்டெல்லா மலையனூருக்கு நேற்று முன்தினம் வந்தார்.

கிணற்றில் மூழ்கி சகோதரிகள் பலி

பின்னர் அவர் நேற்று மதியம் குளிப்பதற்காக அங்குள்ள விவசாய கிணற்றுக்கு தனது 3 மகள்களுடன் சென்றார். அப்போது நீச்சல் தெரியாத ஸ்டெல்லா கிணற்று படியில் அமர்ந்தபடி துணிகளை துவைத்துக் கொண்டிருந்தார். மகள்கள் 3 பேரும் கிணறு படிக்கட்டில் அமர்ந்தபடி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சுஜாதா படிக்கட்டில் இருந்து தவறி கிணற்றுக்குள் விழுந்தாள். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த சுவேதா, நிவேதா ஆகியோர் தங்கையை காப்பாற்ற பதற்றமடைந்து கிணற்றுக்குள் குதித்தனர். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் 3 பேரும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கி பலியாகினர். 3 மகள்களும் தன் கண் எதிரே தண்ணீரில் மூழ்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஸ்டெல்லா காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார்.

சோகம்

இதைகேட்ட அக்கம் பக்கத்தில் விவசாய பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் சிலர் ஓடி வந்து கிணற்றுக்குள் இறங்கி சகோதரிகள் 3 பேரையும் பிணமாக மீட்டனர். பலியான தனது மகள்களின் உடல்களை பார்த்து ஸ்டெல்லா மற்றும் அவரது உறவினர் கதறி அழுதனர்.

மேலும் இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், சிறுபாக்கம் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர் இல்ல பிறந்தநாள் விழாவுக்கு வந்த இடத்தில் தாய் கண் எதிரே கிணற்றில் தவறி விழுந்து 3 பெண் குழந்தைகள் பலியான சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்