கொரோனா வைரஸ் பரவலை தடுக்க டிக்கெட் கவுண்ட்டரில் 3 அடி இடைவெளி விட்டு நின்ற பயணிகள்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ரெயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்ட்டர்களில் பயணிகள் 3 அடி இடைவெளியில் நின்று டிக்கெட் எடுத்து சென்றனர்.
மும்பை,
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பீதியால் பொதுமக்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்குவதையும், தொடுவதையும் கூட தவிர்த்து வருகின்றனர். மேலும் மராட்டியத்தில் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விமான நிலையங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெளியூர் மற்றும் மின்சார ரெயில்களில் செல்லும் பயணிகள் ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர்களில் ஒருவருக்கு பின் ஒருவர் இடித்துக்கொண்டும், முந்திக்கொண்டும் டிக்கெட்டுகளை எடுத்து வந்தனர்.
இந்த நிலையில் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் நெரிசலில் ஒருவருக்கொருவர் தொடுவதன் மூலம், கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக ரெயில்வே நிர்வாகம் சிறப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
3 அடி இடைவெளியில்
அதன்படி நேற்று முதல் அனைத்து ரெயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்ட்டர்களில் பயணிகள் 3 அடி இடைவெளியில் ஒருவருக்கு பின் ஒருவர் நிற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.
மேலும் அவர்கள் சரியான இடைவெளியில் நிற்பதற்கு வசதியாக ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் 3 அடி இடைவெளியில் ‘கோடு’ போட்டு அடையாளப்படுத்தி வருகின்றனர். அந்த கோட்டில்தான் பயணிகள் நிற்க வேண்டும் எனவும், ஒருவருக்கொருவர் தொடும் தூரத்தில் நிற்கக்கூடாது எனவும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து நேற்று மும்பை தாதர், சி.எஸ்.எம்.டி. உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்ட்டர்களில் பயணிகள் 3 அடி இடைவெளியில் நிறுத்தப்பட்டனர்.