கொரோனா வைரஸ் எதிரொலி: மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

கொரோனா வைரஸ் எதிரொலியாக மடப்புரம் பத்திர காளியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

Update: 2020-03-20 23:15 GMT
திருப்புவனம், 

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். மேலும் இந்த கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவுவதை தடுப்பதற்காக மத்திய-மாநில அரசு கள் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இது தவிர பெரிய கடைகள், வர்த்தக நிறுவனங்கள், மதுக்கடை பார்கள் உள்ளிட்டவைகளை மூடவும் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று நடை சாத்தப்பட்டது. இதையொட்டி நேற்று திருப்புவனம் அருகே மடப்புரத்தில் தென் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளிம்மன் கோவிலில் காலை 10 மணிக்கு நடை சாத்தப்பட்டது. கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த ஏராளமான பக்தா்கள், தாங்கள் வாங்கி வந்த பூ, எலுமிச்சை மாலைகளை கோவில் கதவுகளில் போட்டுவிட்டு சாமி கும்பிட்டு சென்றனர்.

இன்னும் சிலர் கோவில் படிக்கட்டுகளில் சூடம் ஏற்றி வழிபாடு செய்தனர். இது குறித்து கோவில் நிர்வாக உதவி ஆணையர் செல்வி கூறியதாவது:-

தமிழக அரசு உத்தரவின் படி கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மடப்புரம் கோவிலில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தொடர் நடவடிக்கையாக வருகிற 31-ந்தேதி வரை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தற்காலிமாக அனுமதி நிறுத்தி வைக்கப்படுகிறது. மேலும் ஆகம விதிகளுக்குட்பட்டு இந்த கோவில் சாமிகளுக்கு நடைபெறும் அனைத்து பூஜைகளும் வழக்கமாக நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் தற்போது மாசி-பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்தது. இதையொட்டி நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் வழக்கம் போல் சாமி தரிசனம் செய்ய வந்தனர். இதையடுத்து அவர்களை 10 பேர் கொண்ட குழுவாக சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகத்தினர் அனுமதித்தனர். மேலும் அங்கு கூட்டம் கூடாமல் இருக்கும் வகையில் ஒலிபெருக்கியில் அவ்வப்போது அறிவிப்பும் செய்தனர். இது தவிர சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று பெரிய கடைகள் வீதிகள் அடைக்கப்பட்டு மதிய வேளையில் போக்குவரத்து மற்றும் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் செய்திகள்