கொரோனா பரவுவதை தடுக்க நாளை ‘மக்கள் ஊரடங்கு’ கர்நாடகத்தில் பஸ்-ரெயில்கள் ஓடாது ஓட்டல்கள், கடைகள் மூடப்படுகின்றன
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப் படுவதால், கர்நாடகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பஸ்-ரெயில்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
வணிக வளாகங்கள்
நேற்று வரை 200-க்கும் மேற்பட்டோர் அந்த வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கர்நாடகத்தை பொறுத்தவரையில் இதுவரை 14 பேரை அந்த வைரஸ் தாக்கியுள்ளது. இது தவிர ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
இதைதொடர்ந்து கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. அதாவது கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள், மதுபான விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மூடப்பட்டுள்ளன. திருமணம் உள்பட பொதுநிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. மென்பொருள் உள்பட தனியார் நிறுவனங்கள், தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றும்படி அறிவுறுத்தியுள்ளன.
பஸ்-ரெயில்கள் ஓடாது
இதனால் பெங்களூருவில் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. சாலைகளில் வாகனங்கள் நெரிசல் இன்றி செல்கின்றன. இந்த நிலையில் கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் பிரதமர் மோடி, 22-ந் தேதி (நாளை) நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை பின்பற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாளை காலை 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை மக்கள் வீடுகளிலேயே இருக்க உள்ளனர்.
இதையொட்டி கர்நாடகத்தில் நாளை அரசு மற்றும் தனியார் பஸ்கள், ரெயில்கள் ஓடாது, மெட்ரோ ரெயில்களின் சேைவயும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆட்டோக்கள், வாடகை கார்கள் இயங்காது என்று அந்த சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடல்
மேலும் மாநிலம் முழுவதும் கோவில்கள் மூடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. கடைகள், ஓட்டல்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்படுகின்றன. அதே நேரத்தில் அரசு-தனியார் மருத்துவமனைகள் சேவைகளில் எந்த பாதிப்பும் இருக்காது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பால் விநியோகத்தில் பாதிப்பு இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.