காரைக்காலில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்களுக்கு 7 ஆண்டு சிறை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து காரைக்கால் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2020-03-20 22:00 GMT
காரைக்கால்,

காரைக்காலை அடுத்த நெடுங்காடு புத்தக்குடியைச் சேர்ந்தவர்கள் நடராஜன் (வயது27), அவரது நண்பர் பாண்டியன் (35). இருவரும், கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந்தேதி இரவு அதேபகுதியில் 9-ம் வகுப்பு படித்து வந்த, 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு வீட்டுக்குள் புகுந்து, மின்சாரத்தை துண்டித்துவிட்டு, சிறுமியின் வாயை பொத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர்.

காரைக்காலில் தங்கி வீட்டு வேலையை முடித்துவிட்டு மறுநாள் வீட்டுக்கு வந்த பெற்றோரிடம், நடந்த சம்பவத்தை கூறி சிறுமிஅழுதாள்.

தொடர்ந்து, சிறுமி மற்றும் பெற்றோர் நெடுங்காடு போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால், போலீசார் புகாரை பதிவு செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விவரம் அறிந்த ஊர் பிரமுகர்கள், மற்றும் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் டாக்டர் அனந்த குமார் ஆகியோர் காரைக்கால் சைடு லைன் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில், காரைக்கால் பஸ் நிலையம் அருகே மறைந்திருந்த நடராஜன், பாண்டியன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

2 பேருக்கு ஜெயில்

இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று காரைக்கால் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது. விசாரணையில் பாலியல் பலாத்காரம் நிரூபிக்கப்பட்டதால், நடராஜன், பாண்டியன் ஆகிய இரு வாலிபருக்கும், தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால், மேலும் 6 மாதம் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு புதுச்சேரி அரசு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்