கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடவடிக்கையாக மூடப்பட்ட கோவிலின் முன்பு நின்று சாமி கும்பிட்ட பக்தர்கள்
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடவடிக்கையாக மூடப்பட்ட கோவிலின் முன்பு நின்று பக்தர்கள் சாமி கும்பிட்டனர்.;
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைள் தீவிரமாக எடுக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க கோவில்கள், ஆலயங்கள், பள்ளிவாசல்களில் வழிபாடுகளையும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழா, ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா உள்பட பல்வேறு திருவிழாக்களும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் நேற்று முதல் கோவில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகள் மட்டுமின்றி சாமி தரிசனத்துக்கும் தற்காலிக விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. நேற்று கோவில்களில் நடை சாத்தப்பட்டு இருந்தது. ஆகம விதிகளின் படி அந்தந்தகோவிலுக்கான கால பூஜைகளை பூஜாரிகள் நிறைவேற்றினார்கள்.
ஈரோட்டில் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நடை சாத்தப்பட்டு இருந்தது. வழக்கமாக இங்கு வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுபோல நேற்றும் ஏராளமான பக்தர்கள்கோவிலுக்கு வந்தனர். ஆனால் கோவிலின் நடை சாத்தப்பட்டு இருந்தது. கோவிலில் உள்ளே செல்லவும் வழி இன்றி கதவுகள் பூட்டப்பட்டு இருந்தன. இருப்பினும் பக்தர்கள் கோவிலின் வெளியே கூடி நின்று சாமியை கும்பிட்டு சென்றனர்.
ஈரோட்டில் கோட்டை ஈஸ்வரன் கோவில், கோட்டை பெருமாள் கோவில், திண்டல் முருகன் கோவில் உள்ளிட்ட அனைத்து முக்கிய கோவில்களும் நடைசாத்தப்பட்டு இருந்தன. இதனால் கோவில் வளாகங்கள் நேற்று வெறிச்சோடி கிடந்தன.
இதுபோல் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பிரப்நினைவு சி.எஸ்.ஐ. ஆலயத்திலும் வழிபாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு உள்ளன. ஆலயத்தில் கூட்டமாக சென்று வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாக கோவிலின் முன்பு அறிவிப்பு வைக்கப்பட்டு உள்ளது. மறு அறிவிப்பு வரும்வரை இந்த நிலை நீடிக்கும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.