அபுதாபி நாட்டில் இருந்து வந்த வாசுதேவநல்லூர் கப்பல் ஊழியருக்கு கொரோனா வைரஸ் அறிகுறியா? ரத்த மாதிரி ஆய்வகத்துக்கு அனுப்பி வைப்பு
அபுதாபி நாட்டில் இருந்து வந்த வாசுதேவநல்லூரைச் சேர்ந்த கப்பல் ஊழியருக்கு கொரோனா வைரஸ் அறிகுறியா?
வாசுதேவநல்லூர்,
அபுதாபி நாட்டில் இருந்து வந்த வாசுதேவநல்லூரைச் சேர்ந்த கப்பல் ஊழியருக்கு கொரோனா வைரஸ் அறிகுறியா? என்பதை கண்டறிவதற்காக அவரது ரத்த மாதிரி ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
கப்பல் ஊழியர்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்த 37 வயதான ஆண் ஒருவர், அபுதாபி நாட்டில் உள்ள கப்பல் நிறுவனத்தில் மெக்கானிக்காக கடந்த 17 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த மாதம் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்து விட்டு, பின்னர் மீண்டும் அபுதாபிக்கு சென்றார்.
இதற்கிடையே கொரோனா வைரஸ் உலக நாடுகளில் வேகமாக பரவி வருவதால், அவர் தனது சொந்த ஊரான வாசுதேவநல்லூருக்கு நேற்று காலையில் திரும்பி வந்தார். அவர் தனக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருக்குமோ? என்று அஞ்சியதால், அவர் தனது உடைமைகளுடன் நேராக வீட்டின் மாடி அறைக்குள் சென்று, கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். பின்னர் அவர், இதுகுறித்து செல்போனில் தன்னுடைய மனைவியிடம் தெரிவித்தார்.
ரத்த மாதிரி
இதுகுறித்து வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே சிவகிரி அரசு ஆஸ்பத்திரி மருத்துவ குழுவினர், அந்த நபரின் வீட்டுக்கு விரைந்து சென்று, அவரது ரத்த மாதிரியை சேகரித்தனர். பின்னர் அதனை ஆய்வுக்காக தேனியில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
ஆய்வக பரிசோதனை முடிவு தெரிந்த பின்னரே மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அபுதாபி நாட்டில் இருந்து வந்த வாசுதேவநல்லூரைச் சேர்ந்த கப்பல் ஊழியர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதும், அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா? என பரிசோதனை செய்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.