கொரோனா அறிகுறியுடன் கண்காணிப்பில் இருப்பவர்கள் தப்பிஓடினால் கொடிய நோய் பரவல் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை - மாநில உள்துறை மந்திரி எச்சரிக்கை

கொரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருப்பவர்கள் தப்பிஓடினால் கொடிய நோய் பரவல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் தெரிவித்தார்.

Update: 2020-03-20 01:12 GMT
மும்பை, 

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி வரும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது. எனவே கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் இடது கையில் அழியாத மை முத்திரை குத்தப்படுகிறது. அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

நாக்பூர், புனே, மும்பை உள்ளிட்ட இடங்களில் கொரோனா பாதிப்பு அறிகுறி முத்திரை குத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தப்பிஓடிய சம்பவங்கள் நடந்தன. இதில், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என சுகாதாரத்துறையால் கையில் முத்திரை குத்தப்பட்ட 4 மாணவர்கள் நேற்று முன்தினம் மும்பையில் இருந்து குஜராத் தப்பிஓட முயன்ற போது சிக்கினர். நேற்றும் இதேபோல தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என முத்திரை குத்தப்பட்ட 6 பேர் மும்பை சென்டிரலில் இருந்து ரெயிலில் குஜராத் செல்ல முயன்றபோது சிக்கினர்.

இவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து மும்பை வந்தவர்கள் ஆவா்.

இதுபோல தப்பிச்செல்பவர்களால் அவர்களுக்கு மட்டுமின்றி அவர்களை சுற்றி உள்ள பொதுமக்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. எனவே கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு அறிகுறி அல்லது சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தப்பிஓடினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் எச்சரித்து உள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தப்பிஓடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே மாநில உள்துறை அமைச்சகம் இதுபோல தப்பிச்சென்று, அவர்களின் உயிருக்கு மட்டுமின்றி மற்றவர்களின் உயிர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்களின் மீது கொடியநோய் பரவல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்