கர்நாடகத்தில் கொரோனா பாதித்த 2 பேர் குணம் அடைந்தனர் இன்று வீடு திரும்புகிறார்கள் என மந்திரி தகவல்
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 பேர் குணம் அடைந்துள்ளதால் அவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) வீடு திரும்புகிறார்கள் என்று மருத்துவ கல்வி மந்திரி சுதாகர் கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக மருத்துவ கல்வி மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கம்ப்யூட்டர் என்ஜினீயர்
கர்நாடகத்தில் பெங்களூரு, மங்களூரு சர்வதேச விமான நிலையங்களில் இதுவரை 1 லட்சத்து 22 ஆயிரத்து 532 பேரை தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை செய்துள்ளோம். கர்நாடகத்தில் நேற்று ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. அவர்களை தவிர கலபுரகியை சேர்ந்த ஒருவர் மரணம் அடைந்துள்ளார். கர்நாடகத்தில் நேற்று கொரோனா வைரஸ் அறிகுறியுடன் 26 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே அந்த வைரசால் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் சிகிச்சை பெற்று வருபவர்களில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் உள்பட 2 பேர் குணம் அடைந்துள்ளனர். அவர்களின் ரத்தம் மற்றும் சளியை பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று உறுதியாகியுள்ளது. 2-வது முறையாக அவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். அதன் முடிவு வந்த பிறகு அவர்கள் 2 பேரும் நாளை (அதாவது இன்று) ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்படுகிறார்கள்.
பயப்பட தேவை இல்லை
அவர்கள் வீட்டுக்கு திரும்பினாலும், அவர்களை வீடுகளில் 14 நாட்கள் தனிமையில் வைத்து கண்காணிக்க முடிவு செய்துள்ளோம். இது கர்நாடகத்திற்கு நல்ல செய்தி. அதனால் மக்கள் யாரும் பயப்பட தேவை இல்லை. தங்களின் இருப்பிடத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
மாநிலத்தில் இதுவரை 1,143 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் 915 பேரின் முடிவு வந்துள்ளது. அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் அறிகுறியுடன் புதிதாக 26 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.