ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக கூறி தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டல் 2-வது கணவர் மீது வழக்குப்பதிவு

பெங்களூருவில், ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக கூறி தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த 2-வது கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-03-19 23:33 GMT
பெங்களூரு, 

பெங்களூரு கிரிநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 37 வயது பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 13 வயதில் மகள் உள்ளார். அந்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. பின்னர் 2 பேரும் பிரிந்து விட்டனர். மேலும் முதல் கணவருடன் இருந்து விவாகரத்து பெற்று தனது மகளுடன் அந்த பெண் வசித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் ஊழியராக அவர் பணியாற்றி வருகிறார்.

இதற்கிடையில், மதன் என்பவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் கடந்த ஆண்டு (2019) டிசம்பர் 5-ந் தேதி அந்த பெண்ணை மதன் திருமணம் செய்து கொண்டார். அப்போது அந்த பெண்ணையும், அவரது மகளையும் நன்றாக பார்த்து கொள்வதாக அவர் கூறியதாக தெரிகிறது. திருமணமான புதிதில் மதனும், அந்த பெண்ணும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டல்

இந்த நிலையில், அப்பெண்ணை மதன் திருமணம் செய்திருப்பது பற்றி, அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. உடனே அவர்கள், மதனுக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதற்கு மதனும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த பெண்ணுக்கு தொியவந்ததும், மதனுடன் சண்டை போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதன், கடந்த சில நாட்களாக அந்த பெண்ணின் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் தன்னிடம் இருக்கும் ஆபாச வீடியோக்களை வௌியிடாமல் இருக்க ரூ.20 லட்சம் கொடுக்கும்படி கேட்டு அந்த பெண்ணை மதன் தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவருக்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் மதன் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுபற்றி கிரிநகர் போலீஸ் நிலையத்தில் தனது 2-வது கணவர் மதன் மீது அப்பெண் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்