ஊரக புத்தாக்க திட்டம் மூலம் மிகவும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவா்களுக்கு தொழில் பயிற்சி - கலெக்டர் தகவல்
மாவட்டத்தில் ஊரக புத்தாக்க திட்டம் மூலம் மிகவும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவா்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.
சிவகங்கை,
மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மாவட்ட ஊரக புத்தாக்க செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
மாவட்ட ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் காளையார்கோவில், மானாமதுரை, தேவகோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 124 ஊராட்சிகளில் கள ஆய்வு மேற்கொண்டு கணக்கெடுப்பின் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவா்களை கண்டறிந்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் நோக்கத்தில் ஊரக புத்தாக்க திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மகளிர் திட்டம், கால்நடை பராமரிப்புத்துறை, மாவட்ட தொழில் மையம், மாவட்ட முன்னோடி வங்கி ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து மிகவும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவா்களுக்கு தேவையான தொழில் பயிற்சிகள் வழங்கி சுயதொழில் தொடங்குவதற்கு வங்கிக்கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தொழில் முனைவோர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் அளித்து வங்கிக் கடனுதவிகள் கிடைக்க வழிவகை செய்திட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலா் அருண்மணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனா் பழனீஸ்வரி கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் முருகேசன், மாவட்ட தொழில் மைய மேலாளர் கணேசன், முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.