கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணி; பஸ்சுக்காக 4 கிலோ மீட்டர் நடந்து செல்லும் கிராம மக்கள்
சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள் பஸ்சுக்காக 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.;
போகலூர்,
பரமக்குடி தாலுகா போகலூர் ஒன்றியம்் கீழாம்பல் கிராமத்தில் 350-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வெளியூர்களுக்கு வேலைக்கு சென்று திரும்புபவர்களாக உள்ளனர். இந்த ஊருக்கு பரமக்குடியில் இருந்து திருவாடி வழியாக பஸ் போக்குவரத்து உள்ளது.
இந்த ஊரில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல கீழகோட்டை மற்றும் கொழுந்துரை வழியாக சாலை உள்ளது. ஆனால் அந்த வழியில் பஸ் போக்குவரத்து கிடையாது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே வந்து செல்ல முடியும். மேலும் இந்த வழியாக செல்ல வேண்டும் எனில் கூடுதலாக 5 கிலோ மீட்டர் சுற்றிச்செல்ல வேண்டும்.
இந்தநிலையில் கீழாம்பல் கிராமத்தில் பஸ்கள் வந்து செல்லும் வழித்தடத்தில் புதிய சாலை அமைக்கும் பணிகள் 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்காக கற்கள் கொண்டு வரப்பட்டு சாலையின் இருபுறமும் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இதனால் இந்த ஊருக்கு பஸ்கள் வருவதில்லை. மேலும் அந்த வழியாக வாகனங்கள் சென்று வருவதற்கும் பெரும் சிரமமாக உள்ளது.
இதன் காரணமாக வெளியூர்களுக்கு வேலைக்கு செல்வோர் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பஸ் ஏறிச்செல்லும் அவல நிலை இருந்து வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித பயனும் இல்லை.
எனவே சாலை பணிகளை உடனடியாக மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.