கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - கலெக்டர் ஆய்வு
ராமநாதபுரத்தில் நடைபெற்ற கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் வீரராகவராவ் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் பஸ் நிலைய வளாகத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் வீரராகவ ராவ் வழங்கினார். மேலும் பொது சுகாதார துறையின் மூலம் கை கழுவும் முறை குறித்து வழங்கப்பட்ட செயல்முறை விளக்கத்தையும், செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் திரையிடப்பட்ட கொரோனா தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு குறும்படத்தையும் அவர் பார்வையிட்டார்.
பின்பு கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:- கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் மொத்தம் 16 மண்டல குழுக்களும், 33 மருத்துவ குழுக்களும் அமைக்கப்பட்டு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட எல்லைகளில் 3 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வெளியூர்களில் இருந்து வரும் தனியார் மற்றும் அரசு பஸ்கள், பிற வாகனங்கள் அனைத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை குழுக்களாக கூடுவதையோ, வெளியில் செல்வதையோ தவிர்க்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள 10 அரசு மருத்துவமனைகள், 59 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 259 துணை சுகாதார நிலையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கலெக்டர் அலுவலகத்தில் 1077, 1800 425 7038 என்ற கட்டணமில்லா தொடர்பு எண்களில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பாக தனிமைப்படுத்தி சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்க 86 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அண்டை நாடுகளில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்தை ேசர்ந்த மொத்தம் 245 பேர் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பரிசோதிக்கப்பட்டு இதுவரை 203 நபர்கள் தனிமைப்படுத்தும் காலம் முடிந்து கொரோனா தொற்று ஏதுமில்லாமல் நலமுடன் உள்ளனர். மீதமுள்ள 42 பேரும் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
அவர்களுக்கும் இதுவரை கொரோனா அறிகுறி ஏதும் தென்படவில்லை. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் இல்லை. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. இருப்பினும் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிரதீப்குமார், ராமநாதபுரம் துணை கலெக்டர் சுகபுத்ரா, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.