துபாய் விமானத்தில் மதுரை வந்த பயணிகள் மருத்துவ பரிசோதனைக்கு செல்ல மறுத்து போராட்டம்: அதிகாரிகள் சமரசத்தால் 144 பேர் முகாம்களில் தங்க வைப்பு
துபாய் விமானத்தில் மதுரை வந்த பயணிகள் மருத்துவ பரிசோதனைக்கு செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் நடத்திய சமரச பேச்சுக்கு பின்னர், அந்த விமானத்தில் வந்த 144 பேரும் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.
மதுரை,
துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு நேற்று மாலை 4.30 மணிக்கு தனியார் விமானம் வந்தது. அந்த விமானத்தில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த 144 பயணிகள் இருந்தனர். அவர்களில் 3 பெண்களும், ஒரு குழந்தையும் அடங்குவர்.
அவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இருக்கிறதா? என்பது குறித்து விமான நிலையத்தில் இருந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், பரிசோதனை செய்தனர். ஆனால் அவர்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இருந்ததாக தெரியவில்லை. இருப்பினும், மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளையும் 15 நாட்கள் கண்காணிப்பில் வைக்க உத்தரவிட்டிருப்பதாக அந்த பயணிகளிடம் அதிகாரிகள் கூறினர். இதன் காரணமாக, அவர்கள் அனைவரையும் சொந்த ஊருக்கு அனுப்பாமல் முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் பயணிகளிடம் தெரிவித்தனர்.
இதற்கிடையே, அந்த விமானத்தில் வந்த பயணிகளுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் விமான நிலைய வளாகத்தில் வைத்து கொரோனா தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பயிற்சி வகுப்பு நடத்தினர். இந்த பயிற்சி வகுப்பு சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது. இந்த பயிற்சி வகுப்பு முடிந்த பின்னர், விமானத்தில் வந்தவர்களில் பெரும்பாலானோர் விமான நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 5 அரசு பஸ்களில் ஏறி முகாமிற்கு செல்ல தயாரானார்கள். அப்போது அந்த பயணிகளில் சிலர் தங்களது உறவினர்களை சந்திக்க வேண்டும் என்றும், தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதால் தங்களை ஊருக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து அங்கு வந்த விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவன், துணை போலீஸ் சூப்பிரண்டு அருண், திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் சவுந்தர்யா மற்றும் சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியாராஜ் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் முகாம்களுக்கு செல்ல மறுப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டம் சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இதனால் விமான நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் முகாம்களுக்கு செல்ல முடிவு செய்து அந்த பஸ்களில் ஏறினார்கள். அதன்பின்னர் அவர்களில் 100 பேர் சின்னஉடைப்பு கிராமத்தில் உள்ள மருத்துவ கூடத்திற்கும், மீதமுள்ள 44 பேர் திருப்பரங்குன்றத்தை அடுத்த ஆஸ்டின்பட்டி பகுதியில் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமிற்கும் அழைத்து செல்லப்பட்டனர்.
விமானத்தில் வந்த பயணிகளை அழைத்து செல்வதற்காக பல்வேறு ஊர்களிலும் இருந்து ஏராளமானவர்கள் வாகனங்களில் வந்திருந்தனர். அதிகாரிகளின் இந்த திடீர் நடவடிக்கையால் உறவினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியாராஜ் கூறுகையில், “வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை 15 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்காரணமாக தற்போது இவர்கள் அனைவரும் மருத்துவ முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாள்தோறும் அவர்களுக்கு கொரோனா தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். விமானத்தில் வந்த பயணிகளை ஏ, பி, சி என 3 பிரிவுகளின் கீழ் பரிசோதனை செய்கிறோம்.
பரிசோதனையில் பயணிகள் உடல்நலக்குறைவு இருப்பது தெரியவந்தால் அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்படும். தற்போது வந்துள்ள பயணிகளில் யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை. இருந்தாலும், வரும் காலங்களில் அவர்களுக்கு ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதால் அவர்களை கண்காணிப்பில் வைத்திருக்கிறோம். அவர்களுக்கு இருக்கும் பாதிப்பை பொறுத்து அவர்களை ஒரு சில தினங்களில் வீட்டிற்கு அனுப்பி விடுவோம். வீடுகளில் வைத்து கண்காணிக்கும் போது ஏதேனும் தவறு ஏற்பட்டால் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.