கொரோனா வைரஸ் எதிரொலி: முகக்கவசம் அணிந்து பணியாற்றிய ஊழியர்கள் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு

கொரோனா வைரஸ் எதிரொலியால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து பணியாற்றினர். வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2020-03-20 00:00 GMT
கடலூர்,

சீனா, இந்தியா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனால் இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் மட்டும் இந்த வைரஸ் தாக்குதலால் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 150-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை விடப்பட்டுள்ளது. பூங்காக்கள், தியேட்டர்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. மேலும் சுற்றுலா தலங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடைகள் அடைப்பு

அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சில்வர் பீச்சுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தியேட்டர்கள், பூங்காக்கள், மதுபான பார்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் பெரும்பாலான பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 10 மற்றும் அதற்கு மேல் பணியாளர்கள் பணிபுரியும் வணிக வளாகங்களை மூட, அதன் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து அவரது கோரிக்கையை ஏற்று நேற்று மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நகைக்கடைகள் மற்றும் ஒரு சில வணிக வளாகங்கள் மூடப்பட்டன. மேலும் ஒரு சில வணிகர்கள் மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்தனர்.

கிருமி நாசினி

இதற்கிடையே திறக்கப்பட்டிருந்த ஜவுளிக்கடைகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது கைகளை நன்கு சுத்தம் செய்த பிறகே பணிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஜவுளிக்கடைகள், தனியார் மருத்துவமனைகளுக்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக சானிடைசர், திரவ சோப்பு, தண்ணீர் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தது. கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க முகக்க வசம் அணிந்து பணியாற்றியதை பார்க்க முடிந்தது.

இதுதவிர அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் வாகனங்களில் உள்ள இருக்கைகள், பஸ்களில் உள்ள ஜன்னல் கம்பிகள், கைப்பிடிகள் உள்ளிட்டவை சுத்தம் செய்யப்பட்டது.

பயணிகள் இன்றி...

கொரோனா வைரஸ் பீதியால் பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த நிலையில், கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு சென்றவர்கள் முகக்கவசம் அணிந்தபடி சென்றனர். மேலும் கடலூர் உழவர் சந்தை, பான்பரி மார்க்கெட் மற்றும் வணிக வளாகங்களுக்கு ஒரு சில பொதுமக்களே வந்து சென்றனர். இதனால் மார்க்கெட்டுகள் வெறிச்சோடி கிடந்தன.

இதுபோல் பொதுமக்கள் வெளியூர் பயணங்களை தவிர்த்து வருவதால் விருத்தாசலம், கடலூர் ரெயில் நிலையங்கள் பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடந்தது. மேலும் ஒரு சில பஸ்கள் பயணிகள் இன்றி டிரைவர் மற்றும் கண்டக்டருடன் சென்றதை காண முடிந்தது.

பரிசோதனை

மேலும் புதுச்சேரி-கடலூர் எல்லை பகுதியான ஆல்பேட்டை சோதனை சாவடியில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு, அந்த வழியாக வரும் வெளியூர் பயணிகளை ‘தெர்மல் ஸ்கேனர்’ என்ற கருவியால் காய்ச்சல் உள்ளதா? என்று பரிசோதனை செய்கின்றனர். இதுபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணித்து பரிசோதனை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்