பயோ மெட்ரிக் வருகை பதிவு முறையை ரத்துசெய்ய வேண்டும்: கொரோனா விழிப்புணர்வு கூட்டத்தில் ஆர்.டி.ஓ. வலியுறுத்தல்
தொழிற்சாலைகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் என தொழிற்சாலை நிர்வாகிகளுக்கான கொரோனா விழிப்புணர்வு கூட்டத்தில் பொன்னேரி ஆர்.டி.ஓ. பெருமாள் வலியுறுத்தினார்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலை உற்பத்தியாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின் பேரில் பொன்னேரி ஆர்.டி.ஓ. பெருமாள் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் திட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், சிப்காட் திட்ட அலுவலர் சுப்பிரமணியம், உதவி பொறியாளர் சரவண நித்தின், மாசு கட்டுபாட்டு வாரிய மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பயோ மெட்ரிக் வருகை பதிவு
நிகழ்ச்சியில் பொன்னேரி ஆர்.டி.ஓ. பெருமாள் பேசியதாவது:-
தொழிற்சாலைகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவு இருந்தால் அதனை உடனடியாக ரத்து செய்திட வேண்டும். தொழிற்சாலைகளில் அனைவரையும் அடிக்கடி ஒன்று கூட்டி கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்படுவது தவிர்க்க வேண்டும்.
பாதுகாப்பு கருதி தொழிலாளர்களுக்கு முக கவசத்தை தொழிற்சாலை நிர்வாகத்தினர் வழங்கிட வேண்டும். தொழிலாளர்களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி இருந்தால் அவர்களை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும்.
தொழிற்சாலை வளாகங்களில் தொடர்ந்து தினமும் கிருமி நாசினியை தெளிப்பதை உறுதி செய்திட வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
மேலும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தொழிற்சாலைகளுக்கு யாராவது வரும்போது அவர்களுக்கு சந்தேகப்படும்படியான தொடர் இருமல், காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு இருந்தால் உடனே சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இது வரும் முன் காப்போம் என்ற நோக்கிலான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகும். எனவே யாரும் அச்சப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் வட்டார மருத்துவரான டாக்டர் கோவிந்தராஜ், கொரோனா விழிப்புணர்வு குறித்தும் கை கழுவும் முறை குறித்தும் தொழிற்சாலை நிர்வாகிகளுக்கு விளக்கி கூறினார்.
முன்னதாக மகாலிங்கம் வரவேற்றார். முடிவில் பிரேம் குமார் நன்றி கூறினார்.