கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி: தமிழகத்தில் அரசு விரைவு பஸ்கள் சேவை 50 சதவீதம் ரத்து தினமும் ரூ.80 லட்சம் இழப்பு

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக தமிழகத்தில் அரசு விரைவு பஸ்களின் சேவை 50 சதவீதம் ரத்து செய்யப்பட்டது. இதன்மூலம், தினமும் ரூ.80 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2020-03-19 23:00 GMT
திருச்சி,

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் (எஸ்.இ.டி.சி.) திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சென்னை, பெங்களூரு, திருப்பதி, எர்ணாகுளம், திருவனந்தபுரம், நாகர்கோவில், திருநெல்வேலி, கோவை, ஊட்டி, கொடைக்கானல், சேலம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விரைவு பஸ்களை தினமும் இயக்கி வருகிறது. கொரோனா வைரஸ் எதிரொலியாக பொதுமக்கள் பஸ்களில் வெளியூர் பயணம் செய்வதை பெரும்பாலும் தவிர்த்து விட்டனர். இதனால், பஸ்களில் போதிய கூட்டம் இன்றி வசூலும் வெகுவாக குறைந்து விட்டது. எனவே,அரசு விரைவு பஸ்களின் சேவை எண்ணிக்கையை பெரும்பாலும் ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அரசு விரைவு ஏ.சி.பஸ் வசதி பயன்படுத்தும் வகையில் மற்ற பஸ்களின் கட்டணம்போல சாதாரண கட்டணமே வசூலிக்கப்பட்டது. அதாவது, ஏ.சி. வசதிக்காக கூடுதல் கட்டணம் வசூலிப்பதில்லை. தற்போது குறைவாக பஸ்கள் இயக்கப்பட்டாலும் அவற்றிலும் 40 பேர் பயணிக்கக்கூடிய இடத்தில் போதிய பயணிகள் இன்றி 10 பேர், 15 பேர் என்றுதான் செல்கின்றனர்.

50 சதவீதம் ரத்து

இதுகுறித்து அரசு விரைவு பஸ் போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழகத்தில் நீண்ட தூரம் பயணிக்கக்கூடிய பயணிகள் வசதிக்காகவே அரசு விரைவு பஸ்களை இயக்கி வருகிறது. தனியார் ஆம்னி பஸ்களுக்கு இணையான வசதியுடன் இயக்கப்பட்டு வருவதால் பயணிகள் அரசு விரைவு பஸ்சில் பயணிப்பதையே அதிகம் விரும்பினர். ஏ.சி. வசதியை பயன்படுத்தி இருக்கையில் அமர்வதற்கு வசதியாகவும், தூங்குவதற்கு வசதியாக தனியாகவும் (சிலீப்பர்)அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. டிரைவர், கண்டக்டர்களுக்கு முக கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அரசு விரைவு பஸ்களில் வெளியூர் செல்வதை பயணிகள் தவிர்த்து வருவதால், பயணம் செய்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இதனால், டிக்கெட் கட்டணமும் வசூல் ஆகவில்லை. எனவே, டீசல் செலவை கணக்கிட்டு அரசு விரைவு பஸ்களின் சேவை எண்ணிக்கையை வெகுவாக குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 1,082 அரசு விரைவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு செல்லும் பஸ்களின் சேவை 50 சதவீதம் வரை ரத்து செய்யப்பட்டு விட்டன. நேற்றைய தினம் 602 அரசு விரைவு பஸ்களே இயக்கப்பட்டன.

ரூ.80 லட்சம் இழப்பு

அரசு விரைவு போக்குவரத்து கழக மூலம் தினமும் டிக்கெட் கட்டணமாக ரூ.1 கோடியே 80 லட்சம் வரை வசூல் ஈட்டப்பட்டு வந்தது. தற்போது பஸ்கள் சேவை ரத்து செய்யப்பட்டது மட்டுமல்லாமல், இயக்கப்படுகின்ற பஸ்களில் பயணிகள் எண்ணிக்கையும் குறைவாக இருப்பதால் ரூ.1 கோடி மட்டுமே டிக்கெட் கட்டணமாக வசூல் ஈட்டப்படுகிறது. தினமும் ரூ.80 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே, திருச்சி மண்டல அரசு போக்குவரத்து கழகம்(கும்பகோணம் லிட்) பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த 50-க்கும் மேற்பட்ட பஸ்களை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்