234 தொகுதிகளிலும் சிவில் சர்வீசஸ் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் மு.க.ஸ்டாலின் உறுதி
234 சட்டமன்ற தொகுதிகளிலும் சிவில் சர்வீசஸ் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய தொகுதியான சென்னை கொளத்தூரில் உள்ள அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் ‘அனிதா அச்சீவர்ஸ் அகாடமி’யில் 3-வது அணியில் பயிற்சி பெற்று, வேலைவாய்ப்பு பெற்ற 71 மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பேனா மற்றும் புத்தகங்களை வழங்கினார்.
இதேபோல 4-வது அணியில் பயிலும் 60 மாணவிகளுக்கு பேனா, புத்தகங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து திருப்பத்தூர் எம்.எல்.ஏ.வின் அண்ணன் மகன் திருமண நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.
வேலைவாய்ப்பு
‘அனிதா அச்சீவர்ஸ் அகாடமி’யில் நடந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
மருத்துவ கல்வியை பெற முடியாத சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த அரியலூர் பகுதியை சேர்ந்த மாணவி அனிதாவின் பெயரில் பயிற்சி மையம் நடத்தப்பட வேண்டும் என முடிவு செய்து, 2019 பிப்ரவரி மாதம் இந்த அரிய முயற்சியை தொடங்கினோம். அப்படி தொடங்கப்பட்ட நேரத்தில், இந்த பயிற்சியில் 61 மாணவிகள் இணைந்து பயிற்சி பெற்றார்கள். அவர்களில் 59 பேர் வேலைவாய்ப்பு பெற்றார்கள். அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் இரண்டாம் கட்ட பயிற்சி தொடங்கப்பட்டு, அதில் 67 பேர் பயிற்சி பெற்று 51 பேர் வேலைக்கு சென்றுள்ளனர்.
தொடர்ந்து 3-வது கட்டமாக நவம்பர் மாதம் தொடங்கி மார்ச் 2020 வரை பயிற்சி பெற்றிருக்கும் மாணவிகள் 75 பேர். அதில் 53 பேர் வேலைவாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். இப்போது 4-வது கட்டமாக தொடங்க இருக்கும் இந்த பயிற்சியில் 61 மாணவிகள் இடம் பெற்றிருக்கிறார்கள். இன்னும் 20 பேர் சேரவிருக்கிறார்கள். எப்படியும் இந்த 61 பேரில் நிச்சயமாக 40 பேருக்கு குறையாமல் வேலைவாய்ப்பை பெறப்போகிறீர்கள்.
234 தொகுதிகளிலும்...
இதை முதன்முதலில் தி.மு.க. சார்பில் நடத்தவேண்டும் என முடிவு செய்து, கொளத்தூர் தொகுதியில் இந்த பணியை முதலில் தொடங்கினோம். தொடங்கிய நேரத்தில், இந்த தொகுதியில் மட்டும் இதை நடத்தாமல் தமிழகத்தில் இருக்கும், அதிலும் குறிப்பாக தி.மு.க.வை சேர்ந்தவர்கள் எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து தொகுதிகளிலும் இதேபோன்ற முகாம்கள் அமைக்கப்பட்டு, அந்தந்த தொகுதியில் இருக்கும் மாணவிகளுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும் என்று என்னுடைய விருப்பத்தை நான் அப்போதே எடுத்து சொன்னேன்.
அது இன்றைக்கு முழுமையாக இல்லையென்று சொன்னாலும், மாவட்டச்செயலாளர் சேகர்பாபு தொகுதியில், சைதாப்பேட்டை தொகுதியில், ஆயிரம் விளக்கு தொகுதியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடைய தொகுதிகளில் தொடங்கப்பட்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் இந்த நேரத்திலும் இந்த பணியை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம் என்றால், ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு 234 தொகுதிகளிலும் இதே போன்ற சிவில் சர்வீசஸ் பயிற்சி மையங்களை நடத்துவதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.