சென்னையில் 669 மாநகராட்சி பூங்காக்கள் மூடப்பட்டது நடைபயிற்சிக்கு சென்றவர்கள் ஏமாற்றம்
சென்னையில் பூங்காக்கள் அனைத்தும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்டு உள்ளது.
சென்னை,
சென்னை பெருநகர மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் அண்ணாநகர், சூளைமேடு, மயிலாப்பூர், தண்டையார்பேட்டை, தியாகராயநகர், வடபழனி, அடையாறு, திருவான்மியூர், வேளச்சேரி, பெரம்பூர், கொளத்தூர், பெரியார்நகர் உள்பட பல்வேறு இடங்களில் 669 பூங்காக்கள் அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இந்த பூங்காக்கள் அனைத்தும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்டு உள்ளது. இதனால் நடைபயிற்சிக்கு சென்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறிய தாவது:-
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பொதுமக்கள் அதிகம் கூடும் பூங்காக்களை மூடமுடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி முதல் கட்டமாக மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 669 பூங்காக்கள் மூடப்பட்டு உள்ளது. மறு உத்தரவு வரும்வரை பூங்காக்கள் மூடப்பட்டு இருக்கும். பொதுமக்கள் மூலம் இந்த வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், பேட்மிண்டன், டென்னிஸ், ஸ்கேட்டிங் போன்றவற்றுக்கான உள்விளையாட்டு அரங்குகளும் செயல்பட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.