சாலையோரத்தில் நெல் கொட்டி வைக்கும் விவசாயிகள்
மூட்டைகளை அடுக்கி வைக்க போதிய இடவசதி இல்லாததால் சாலையோரத்தில் நெல் மணிகளை விவசாயிகள் கொட்டிவைக்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று அவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.;
விக்கிரமங்கலம்,
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதிகளில் சம்பா நெல் அறுவடை செய்யப்பட்டு பல வாரங்களாக அதை விற்பனை செய்ய முடியாமல் சாலை ஓரங்களில் வரிசையாக கொட்டி விற்பனைக்காக விவசாயிகள் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் அரசு நாளொன்றுக்கு ஆயிரம் மூட்டைகள் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
மேலும் நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க போதிய இடவசதி இல்லாததாலும், விவசாயிகள் விற்பனை செய்யும் நெல் மூட்டைகளை அடுக்கி கட்டிவைக்க போதிய ஆள் பற்றாக்குறையும் இருப்பதனால் விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையம் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான்- தா.பழூர் சாலை ஓரங்களில் நீண்ட வரிசையில் நெல்லை கொட்டி வைத்துள்ளனர்.
இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதோடு காற்று, மழை போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால் நெல்கள் வீணாகி விடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விவசாயிகளின் நெல் மூட்டைகளை விரைவில் கொள்முதல் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.