காய்கறி சந்தை, மாட்டு சந்தை ரத்து ; கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் காய்கறி சந்தை, மாட்டு சந்தை ரத்து செய்யப்படுகிறது என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் காய்கறி வாரச்சந்தை, மாட்டு சந்தை போன்றவை நடைபெற்று வருகின்றன. மேற்படி சந்தை நடைபெறும் இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நிலை உள்ளது.
தற்போது தமிழக அரசின் வழிகாட்டுதல்படி மாவட்ட நிர்வாகத்தால் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒரே இடத்தில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என பொது மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் நலன் கருதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் நடைபெறும் அனைத்து காய்கறி வாரச்சந்தை, மாட்டு சந்தை மற்றும் திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் நடைபெறும் வாரச்சந்தை உள்ளிட்ட அனைத்தும் வருகிற 31–ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
பொதுநலன் கருதி மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைக்கு பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.