கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: குற்றாலம் அருவிகளுக்கு செல்லும் பாதை மூடல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, குற்றாலம் அருவிகளுக்கு செல்லும் பாதை மூடப்பட்டு, அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தென்காசி,
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, குற்றாலம் அருவிகளுக்கு செல்லும் பாதை மூடப்பட்டு, அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ்
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பரவிய நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி வருகிற 31–ந்தேதி வரையிலும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், பூங்காக்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அருவிகளுக்கு செல்ல தடை
இதையடுத்து தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் வர வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் நேற்று முன்தினம் அறிவித்தார். தொடர்ந்து நேற்று குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு, அந்த பாதைகளில் இரும்பு தடுப்புகள் மற்றும் சங்கிலிகளால் மூடப்பட்டு உள்ளது. மேலும் அங்கு அருவியில் குளிக்க அனுமதி இல்லை என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது.
குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் அருவிகளில் தண்ணீர் விழுந்து சீசன் களைகட்டும். அப்போது தினமும் பல ஆயிரக்கணக்கானவர்கள் வந்து, அருவிகளில் குளித்து மகிழ்வார்கள். சீசன் இல்லாத காலத்திலும் அருவியில் தண்ணீர் விழுந்தால், சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்வது வழக்கம்.
சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
அதேபோன்று நேற்று ஐந்தருவியில் தண்ணீர் விழுந்தது. இதனால் அங்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள், அருவிக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டு இருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனால் குற்றாலம் ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
வருகிற 31–ந்தேதி வரையிலும் குற்றாலம் அருவிகளுக்கு செல்லும் பாதை மூடப்பட்டு இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.