கியாஸ் சிலிண்டரில் கசிவை சரி செய்தபோது தீ விபத்து; 2 பேர் படுகாயம்

பாணாவரம் அருகே கியாஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவை சரி செய்தபோது தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2020-03-19 22:00 GMT
பனப்பாக்கம்,

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தை அடுத்த ஆயல் கிராமம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 30), கூலி தொழிலாளி. இவரது மனைவி சுகுணா (25). வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் காலியாகி விட்டதால் புதிய கியாஸ் சிலிண்டரை மாற்ற முயன்றார். அப்போது கியாஸ் கசிவு ஏற்பட்டு, அடுப்பு எரியவில்லை. இதையடுத்து அவர் சம்பந்தப்பட்ட கியாஸ் நிறுவனத்துக்கு புகார் கூறினார்.

அதன்பேரில் கியாஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ரங்காபுரம் கிராமத்தை சேர்ந்த உதயசூரியன் (36) என்பவர் வீட்டுக்கு வந்து கியாஸ் சிலிண்டரில் உள்ள ரப்பரை மாற்றிவிட்டு ரெகுலேட்டரை பொருத்தினார். இதில் சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்துள்ளது.

பின்னர் கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது ஏற்கனவே வீட்டுக்குள் கசிந்து இருந்த கியாஸ் காரணமாக சுகுணாவின் சேலையில் தீப்பிடித்து எரிந்தது. இதேபோல் உதயசூரியனுக்கும் கை, முகத்தில் தீக்காயம் ஏற்பட்டது.

இவர்களின் அலறம் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து பாணாவரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடுகளில் கியாஸ் அடுப்பை பழுதுபார்க்க வருபவர்களுகுகு போதிய அனுபவம் இல்லாத காரணத்தால் தான் இதுபோன்ற தீ விபத்து ஏற்பட்டது என்று அப்பகுதி பொதுமக்கள் கூறினர். 

மேலும் செய்திகள்