‘‘முக கவசத்தை அதிக விவைக்கு விற்றால் கடும் நடவடிக்கை" கலெக்டர் ஷில்பா தகவல்
முக கவசத்தை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.
நெல்லை,
முக கவசத்தை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.
கலெக்டர் ஆய்வு
நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழு சார்பில் முக கவசம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அந்த பணியை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
கொரோனா வைரஸ் பற்றி தீவிரமாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருமல், சளி உள்ளவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். முக கவசம் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் முக கவசம் தயார் செய்யப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் 8 இடங்களில் முக கவசம் தயார் செய்யப்படுகிறது.
கடும் நடவடிக்கை
முக கவசம் ரூ.10–க்கும் விற்பனை செய்யப்படும். முதற்கட்டமாக உள்ளாட்சித்துறை துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்படும். நேரடி தொடர்புள்ள அரசு ஊழியர்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முகக்கவசம் அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் முதியோர் இல்லங்கள், முகாம் இல்லங்களில் தனி கவனம் செலுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அனைவரும் கை, கால்களை சோப்பு போட்டு கழுவ வேண்டும். பெரும்பாலும் பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது, முகக்கவசம் அணிந்து செல்வது நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மகளிர் திட்ட இயக்குனர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.