கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை ; கலெக்டர் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் தேவையற்ற வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சிவன்அருள் கூறினார்.

Update: 2020-03-19 22:30 GMT
வாணியம்பாடி, 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தி சுங்கச்சாவடி அருகில் கொரொனோ வைரஸ் நோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கலெக்டர் சிவன் அருள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சுங்கச்சாவடியில் வரும் வாகனங்களுக்கு லைசால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டனர். பின்னர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். மேலும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு வெப்பத்தன்மை அறியும் கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டது.

பின்னர் கலெக்டர் சிவன்அருள் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகிறது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டு மிக கடுமையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் சுற்றுலா தலமான ஏலகிரியில் அனைத்து ஓட்டல்களும், விடுதிகளும் மூடப்பட்டு சுற்றுலாவை தவிர்க்க வேண்டும் என்று பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரெயில் நிலையம், சுங்கச்சாவடி உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கொரொனா வைரஸ் நோய் குறித்து திருப்பத்தூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 24 மணி நேர கண்காணிப்பு அறை நிறுவப்பட்டுள்ளது. அனைத்துத் துறைகளும் ஒன்றிணைந்து சேவையை செய்து வருகின்றனர். சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்கள் கை கழுவுவது, முககவசம் அணிவது, வெளியில் அதிகம் செல்வதை தவிர்க்க வேண்டும் ஆகியவற்றை கூறி வருகிறோம்.

மேலும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சில பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்துவது தவிர்க்க வேண்டும் என்பதை கண்காணித்து வருகிறோம். கொரொனா வைரஸ் நோய் குறித்து தமிழகத்தில் சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முழுவீச்சில் நடந்து வருகிறது. சமூக வலைதளங்களில் தேவையற்ற வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்