சங்கரன்கோவில் அருகே திருமணமான 6 மாதத்தில் போலீஸ்காரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
சங்கரன்கோவில் அருகே திருமணமான 6 மாதத்தில் போலீஸ்காரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவில் அருகே திருமணமான 6 மாதத்தில் போலீஸ்காரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாத்தூர் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
போலீஸ்காரர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் சிவகிரி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி இலக்கியா (வயது 28). இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் அவர்கள், பெருமாள்பட்டியில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 17–ந்தேதி இரவில் கருப்பசாமி, போலீஸ் நிலையத்தில் இரவு பணிக்கு சென்று விட்டார். எனவே வீட்டில் உள்ள ஒரு அறையில் இலக்கியாவும், மற்றொரு அறையில் மாமனாரும், மாமியாரும் இருந்தனர். பின்னர் வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் நள்ளிரவில் இலக்கியா திடீரென்று தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உதவி கலெக்டர் விசாரணை
நேற்று முன்தினம் காலையில் இலக்கியா தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்த மாமனார், மாமியார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், கரிவலம்வந்தநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த இலக்கியாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இலக்கியா குடும்ப பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்தாரா? அல்லது வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 6 மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்ததால், சாத்தூர் உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.