மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் சரத்பவார் உள்பட 7 பேர் போட்டியின்றி தேர்வு

மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் மராட்டியத்தில் இருந்துசரத்பவார் உள்பட7 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2020-03-19 00:02 GMT
மும்பை, 

நாடு முழுவதும் 55 பேரின் மாநிலங்களவை எம்.பி. பதவி அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதி முடிவுக்கு வருகிறது. இதில் மராட்டியத்தை சேர்ந்த 7 பேரின் பதவியும் அடங்கும். இதையடுத்து அந்த இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் வருகிற 26-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த 6-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

மராட்டியத்தில் 7 இடங்களுக்கு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி சார்பில் சரத்பவார் உள்பட 4 பேரும், பாரதீய ஜனதா சார்பில் 3 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

மேலும் சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் மனு தாக்கல் செய்தார். ஆனால் வேட்பு மனு பரிசீலனையின் போது சுயேச்சை வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டது.

போட்டியின்றி தேர்வு

எனவே காலியாக உள்ள பதவியிடங்களின் எண்ணிக்கையும், வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கையும் சமமாக உள்ளதால் 7 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதனால் வருகிற 26-ந் தேதி நடைபெற இருந்த தேர்தல் அவசியம் இல்லாமல் போய் விட்டது.

தேசியவாத காங்கிரஸ் நிறுவன தலைவர் சரத்பவார், தேசியவாத காங்கிரசின் முன்னாள் மந்திரி பவுசியா கான், சிவசேனாவை சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, காங்கிரசை சேர்ந்த ராஜிவ் சதவ் ஆகியோர் மராட்டியத்தை ஆளும் கூட்டணி கட்சிகள் சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

ராம்தாஸ் அத்வாலே

இதேபோல பாரதீய ஜனதா சார்பில் உதயன்ராஜே போஸ்லே, பகவத் காரத் மற்றும் பாரதீய ஜனதா வேட்பாளராக மனு செய்த குடியரசு கட்சி தலைவர் ராம்தாஸ் அத்வாலே ஆகியோர் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் உதயன் ராஜே போஸ்லே மக்களவை எம்.பி.யாக இருந்தவர். நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலின் போது தேசியவாத காங்கிரசில் இருந்து விலகி பாரதீய ஜனதாவில் சேர்ந்தபோது அந்த எம்.பி. பதவியை ராஜினாமா செய்திருந்தார். பின்னர் இடைத்தேர்தலில் தோற்ற அவருக்கு பாரதீய ஜனதா மாநிலங்களவை எம்.பி. பதவியை வழங்கி உள்ளது.

பாரதீய ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராம்தாஸ் அத்வாலே பிரதமர் மோடி மந்திரி சபையில் மத்திய மந்தியாக உள்ளார்.

மேலும் செய்திகள்