முக்கிய ரெயில் நிலையங்களில் பயணிகளிடம் உடல் வெப்ப பரிசோதனை

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக முக்கிய ரெயில் நிலையங்களில் பயணிகளிடம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

Update: 2020-03-18 23:47 GMT
மும்பை, 

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மராட்டிய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. நேற்று முன்தினம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்று விடுத்து இருந்தார்.

அதில், பொதுமக்கள் அவசியம் இன்றி வெளியே பயணம் செய்தால் ரெயில், பஸ் போக்குவரத்து நிறுத்தப்படும் என தெரிவித்து இருந்தார். ஆனாலும் நேற்று அனைத்து ரெயில்களிலும் பயணிகளின் கூட்டம் காணப்பட்டது.

உடல் வெப்ப பரிசோதனை

இதற்கிடையே கொரோனா வைரஸ் பயணிகளிடம் பரவுவதை தடுக்கும் முயற்சியாக காய்ச்சல் இருப்பதை கண்டறிய சர்ச்கேட், மும்பை சி.எஸ்.எம்.டி., தானே, கல்யாண், போரிவிலி போன்ற ரெயில் நிலையங்களில் பயணிகளிடம் உடல் வெப்ப பரிசோதனை கருவிகள் மூலம் நடத்தப்பட்டது.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் ரெயில் பயணிகளிடம் பரவலை கண்டறிய அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகளிடம் உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்படுகிறது. காய்ச்சல் இருப்பது போல இருந்தால் பயணிகள் வீட்டில் ஓய்வு எடுத்து கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறோம். அவர்கள் வெளியில் நடமாடக்கூடாது.

விழிப்புணர்வு

மேலும் கொரோனா வைரஸ் தொடர்பாக முக்கிய ரெயில் நிலையங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் அனைத்து ரெயில் நிலைய பிளாட்பாரங்கள் மற்றும் ரெயில் பெட்டிகளில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்