கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் எம்.பி.யின் உருவப்படம் அவமதிப்பு தட்சிண கன்னடா மாவட்டத்தில் பரபரப்பு
கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் எம்.பி.யின் உருவப்படம் அவமதிக்கப்பட்டுள்ளது. இதனால் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மங்களூரு,
தட்சிண கன்னடா நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், கர்நாடக மாநில பா.ஜனதா தலைவருமான நளின்குமார் கட்டீல் மங்களூருவில் நடைபெற உள்ள ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறார். அதற்காக விழா ஏற்பாட்டாளர்கள் நளின்குமார் கட்டீலின் உருவப்படம் அச்சிடப்பட்ட பேனர்களை மங்களூரு டவுனில் பல்வேறு இடங்களில் கட்டி உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம நபர்கள் அந்த பேனர்களில் நளின்குமார் கட்டீலின் உருவப்படம் மீது கருப்பு வர்ணம் பூசி அவமதித்துள்ளனர். மேலும் அவரது உருவப்படத்துக்கு கீழ் ‘ஜெய் நேத்ராவதி’ என்ற வாசகத்தையும், சில தகாத வார்த்தைகளையும் எழுதி உள்ளனர்.
ரூ.1,500 கோடி நிதி
இது மங்களூருவில் மட்டுமல்லாது தட்சிண கன்னடா மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி மங்களூரு டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின.
அதாவது கடந்த 5-ந் தேதி முதல்-மந்திரி எடியூரப்பா பட்ஜெட் தாக்கலின்போது எத்தினஒலே திட்டத்திற்காக ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கினார். இந்த திட்டம் செயல் படுத்தப்பட்டால் தட்சிண கன்னடா மாவட்டம் உள்பட கர்நாடக கடற்கரையோர மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்று கூறி பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பதவி விலக வேண்டும்
அந்த போராட்டங்களில் நளின்குமார் கட்டீலும் பங்கேற்று வழிநடத்தினார். மேலும் எத்தினஒலே திட்டத்திற்காக அவர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தார். ஆனால் தற்போது அந்த திட்டத்திற்காக மாநில அரசு நிதி ஒதுக்கி உள்ளது. இதை அறிந்தும் நளின்குமார் கட்டீல் மவுனமாக உள்ளார்.
அதனால் அவர் உடனடியாக கட்சி பதவி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கூறி சிலர், நளின்குமார் கட்டீல் எம்.பி.யின் உருவப்படத்தை அவமதித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.