மாவட்ட, தாலுகா விளையாட்டு மையங்களை மேம்படுத்த ரூ.381 கோடி தேவை சட்டசபையில் மந்திரி ஈசுவரப்பா தகவல்

கர்நாடகத்தில் மாவட்ட, தாலுகா விளையாட்டு மையங்களை மேம்படுத்த ரூ.381 கோடி தேைவப்படுவதாக சட்டசபையில் மந்திரி ஈசுவரப்பா கூறினார்.

Update: 2020-03-18 23:39 GMT
பெங்களூரு, 

கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர் குமார் பங்காரப்பா கேட்ட கேள்விக்கு கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா பதிலளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் 29 மாவட்ட விளையாட்டு மையங்களை மேம்படுத்த ரூ.147 கோடியும், 117 தாலுகா விளையாட்டு மையங்களை மேம்படுத்த ரூ.234 கோடியும் தேவைப்படுகிறது. ஆகமொத்தம் மாவட்ட, தாலுகா விளையாட்டு மையங்களை மேம்படுத்த ரூ.381 கோடி தேவைப் படுகிறது. ஆனால் நடப்பு ஆண்டில் ரூ.11.60 கோடி மட்டுமே நிதி உள்ளது.

அடிப்படை வசதிகள்

முடிந்தவரை விளையாட்டு மையங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சொரப் டவுனில் 10 ஏக்கர் பரப்பளவில் எஸ்.பங்காரப்பா பெயரில் தாலுகா விளையாட்டு மையம் நிறுவப்பட்டுள்ளது. அதில் பார்வையாளர்கள் மாடம், கழிவறை, நீர், மின்சார வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. உள்விளையாட்டு அரங்குகள் அமைக்கவும், ஓட்டப்பந்தயத்திற்கான பாதைகளை அமைக்கவும் நிதி உதவி வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்படும். மத்திய அரசு நிதி உதவி வழங்கினால், அந்த பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்