முக்கிய பிரமுகரை கொலை செய்ய திட்டம் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ரவுடிகள் கைது

முக்கிய பிரமுகரை கொலை செய்யும் நோக்கத்துடன் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ரவுடி கும்பலை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-03-18 23:31 GMT
சேதராப்பட்டு,

சேதராப்பட்டு பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேதராப்பட்டு தொழிற்பேட்டை அருகே ஒரு கும்பல் பதுங்கி இருந்ததைக் கண்டு அவர்களை சுற்றி வளைத்துப் பிடித்தனர். விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தது போலீசுக்கு மேலும் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. அவர்களை சோதனை செய்ததில் ஆயுதங்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று உரிய முறையில் விசாரித்தனர்.

கொலை செய்ய திட்டம்

விசாரணையில் அவர்கள் வாணரப்பேட்டையைச் சேர்ந்த ரவுடிகளான மணிகண்டன் என்ற குட்டி மணி, நைனார்மண்டபம் பிரிய தர்ஷினி நகர் மதியழகன் (வயது 23), தேங்காய்திட்டு சரவணன்(24), பிரான்சுவா தோட்டத்தைச் சேர்ந்த பொன்னுசாமி (60), ஏசுராஜ் டேவிட் என்பது தெரியவந்தது. இவர்கள் ஒரு முக்கிய பிரமுகரை கொலை செய்யும் நோக்கத்துடன் அங்கு பதுங்கி இருந்தது விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். 3 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அந்த கும்பலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்