கன்னிவாக்கம் கிராமத்தில் கிராம சேவை மையத்தில் இயங்கும் ரேஷன் கடை புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை
கன்னிவாக்கம் கிராமத்தில் ரேஷன் கடை கிராம சேவை மையத்தில் இயங்குகிறது. புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில் உள்ள கன்னிவாக்கம் கிராமத்தில் ரேஷன் கடை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சொந்த கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த நிலையில் அந்த கட்டிடம் பழுதாகி மழை நேரத்தில் ரேஷன் கடையில் உள்ள பொருட்கள் நனைந்து நாசமானது. அந்த கட்டிடத்தில் இருந்து பொருட்களை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள கிராம சேவை மைய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து ரேஷன் கடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்திற்குள் உள்ள கிராம சேவை மைய கட்டிடத்தில் சில ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
இதனால் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க பொதுமக்கள் வரும்போது தொடக்கப்பள்ளி உள்ள மாணவர்களுக்கு படிப்பதற்கு தொந்தரவாக உள்ளது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கடை பழுதடைந்து விட்டது. இதனைத்தொடர்ந்து கிராம சேவை மையத்திற்கு ரேஷன் கடை மாற்றப்பட்டது. பழுதடைந்த ரேஷன் கடையும் இடித்து தள்ளப்பட்டது. ஆனால் அந்த இடத்தில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு இதுவரை அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர்.
எனவே ரேஷன் கடை இருந்த இடத்தில் புதியதாக ரேஷன் கடைக்கான கட்டிடம் கட்டுவதற்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.