திடக்கழிவு மேலாண்மை பணிகள் ஆய்வு கூட்டம்
திடக்கழிவு மேலாண்மை பணிகள் ஆய்வு கூட்டம் கலெக்டர் ஜான் லூயிஸ் தலைமையில் நடந்தது.
செங்கல்பட்டு,
திடக்கழிவு மேலாண்மை பணிகள் ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் தலைமையில் செங்கல்பட்டில் நடந்தது. இதில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-
செங்கல்பட்டு மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தீவிரமாக செயல்படுத்திட ஆணையாளர்கள், செயல் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை வெற்றிகரமாக செயல்படுத்திட மக்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவைப்படுகிறது. வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும்.
புதன்கிழமை மட்டும் மக்காத கழிவுகள் சேர்த்து வைத்து பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்போர், தினம் 100 கிலோவுக்கு மேல் குப்பை உற்பத்தி செய்யும் வணிக நிறுவனங்கள் அனைத்தும் அவர்களாகவே குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை முறையில் தீர்வு காண வேண்டும்.
துப்புரவு பணியில் தனிக்கவனம்
மக்கும் கழிவுகள் கொண்டு வீட்டிலேயே உரம் தயாரிக்க வாய்ப்பு உள்ளவர்களுக்கு உள்ளாட்சிகளால் பயிற்சி அளிக்கப்படும். வீட்டு தோட்டம், மாடி தோட்டம் அமைத்து வீட்டில் தயாராகும் உரம் பயன்படுத்திடவும் அந்தந்த உள்ளாட்சிகளின் ஆலோசனைகள் தேவைப்படுவோருக்கு ஆலோசனை வழங்க அறிவுறுத்தப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் துப்புரவு பணியில் தனி கவனம் செலுத்திட உள்ளாட்சிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. துப்புரவு சுகாதார பணிகள் கண்காணிப்பு செய்ய பல்துறை அரசு அலுவலர்கள் கொண்ட 25 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. குப்பைகள் தெருவில், பொது இடங்களில் வீசக்கூடாது. மீறுவோருக்கு திடக்கழிவு மேலாண்மை விதிகள்படி, உள்ளாட்சிகள் நிர்ணயம் செய்த அபராதம் வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும். மக்களின் முழு ஒத்துழைப்பு பெறவும், பிளாஸ்டிக் தடைக்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும்
ஒருமுறை பயன்பாடு பிளாஸ்டிக் விற்பனை, இருப்பு, வழங்குதல் ஆகியவற்றை கண்காணிக்க மேற்கண்ட அலுவலர்கள் குழு, மாவட்ட பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொள்ளும்.
ஒத்துழைப்பு தரவேண்டும்
சுற்றுச்சூழல் பாதுகாக்க வருங்காலம் தலைமுறையினருக்கு பசுமையான பூமியை ஒப்படைக்க நமக்காக எடுக்கும் அரசு நடவடிக்கைக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்
திடக்கழிவு மேலாண்மை பணிகள் முன்னேற்றம் குறித்து மாதம் இருமுறை கலெக்டர் ஆய்வு செய்யப்படுகிறார்.
சில உள்ளாட்சிகளில் சேரிக்கப்படும் கழிவுகளை உரமாக்குவதற்கும், மக்காத கழிவுகளை தீர்வு செய்யவும் போதிய இட வசதியில்லாமல் உள்ளதால், கூட்டுறவு சங்கம் அமைத்து, மேற்படி உள்ளாட்சிகளை சேர்த்து மாவட்ட மத்திய வளம்மீட்பு பூங்கா அமைக்க கருத்துருக்கள் தயாரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.