குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-03-19 00:00 GMT
கடலூர்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும், என்.ஆர்.சி., சி.ஏ.ஏ., என்.பி.ஆர். ஆகிய சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரியும் முஸ்லிம்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதற்கிடையே குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி 18-ந் தேதி (அதாவது நேற்று ) கடலூர் உழவர் சந்தையில் இருந்து ஊர்வலமாக சென்று சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாகவும், அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தை கைவிட்டு, கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே நேற்று காலை தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சேட் முகமது தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மானி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட செயலாளர் காதர் பா‌ஷா, பொருளாளர் உமர்பாரூக், துணை தலைவர் யாசின், துணை செயலாளர்கள் அப்துல் வகாப், யாசர், ஜியாவூர் ரகுமான் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த முஸ்லிம்கள் கலந்து கொண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும், என்.ஆர்.சி., சி.ஏ.ஏ., என்.பி.ஆர். ஆகிய சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரியும் கண்டன கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

சிதம்பரம்

இதேபோல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜின்னா தலைமை தாங்கினார். இதில் குடியுரிமை திருத்த சட்டம், என்.பி.ஆர், என்.ஆர்.சி ஆகியவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர், பெண்கள் கோஷம் எழுப்பினர். இதில் மாநில நிர்வாகி கோவை.அப்துர்ரஹிம், மாவட்ட செயலாளர் இமாம்ஹூசைன்,மாவட்ட பொருளாளர் முஹம்மது யூசப்,மாவட்ட துணை செயலாளர்கள் மஹ்பூகான், அப்துர் ரஹ்மான், அப்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை தலைவர் அப்துல் அகமது நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்