கொரோனா வைரஸ் பீதி: சென்னையில் மக்கள் நடமாட்டம் குறைந்தது தியாகராயநகரில் கடைகள் அடைப்பு

கொரோனா வைரஸ் பீதியால் சென்னையில் மக்கள் நடமாட்டம் சற்று குறைந்து இருக்கிறது. மக்கள் அதிகம் கூடும் பகுதியான தியாகராயநகரில் உள்ள கடைகள் நேற்று முதல் அடைக்கப்பட்டன.;

Update:2020-03-19 04:45 IST
சென்னை, 

கொரோனா வைரஸ் தாக்குதல் உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றை மூடுவதற்கு அரசு உத்தரவு பிறப்பித்தது. பெரும்பாலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளை தவிர்க்க அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நேற்று முன்தினம் முதல் இந்த நடவடிக்கைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி தீவிரம் காட்டி, முனைப்புடன் செயலாற்றி வருகிறது. 2-வது நாளாகவும் நேற்று பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தியது.

தியாகராயநகரில் கடைகள் அடைப்பு

அதில் சென்னையில் எப்போதும் பரபரப்பாக இயங்கக்கூடிய தியாகராயநகரின் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை ஆகியவற்றில் உள்ள கடைகளை அடைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, நேற்று காலை சரவணா ஸ்டோர்ஸ், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட கடைகள் வரை அனைத்தும் மூடப்பட்டன.

மேலும், அந்த பகுதியில் மாநகராட்சியின் சுகாதாரத்துறை சார்பில் டிராக்டர் வண்டியில் ‘டேங்க்’ பொருத்தப்பட்டு ரங்கநாதன் தெரு, உஸ்மான சாலை ஆகியவற்றில் கிருமி நாசினி ‘ஸ்பிரே’ மூலம் தெளிக்கப்பட்டது.

மக்கள் நடமாட்டம் இல்லை

மக்கள் கூட்டமாக கூடுகிற போது கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்பதால் கடைகள் அடைக்கப்பட்டதால் தங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் என்று தினக்கூலி தொழிலாளர்கள் வேதனையோடு தெரிவித்தனர். இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் சிறிய கடைகள் நடத்தும் வியாபாரிகள், “நாங்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கடைகளை நடத்த அனுமதிக்க வேண்டும்” என்று முறையிட்டு வருகின்றனர்.

கடை அடைப்பு அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே ரங்கநாதன் தெரு கிரிக்கெட் விளையாடும் மைதானமாக மாறிப்போனது. பெரிய கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் பெரும்பாலும் வெளியூர்களில் இருந்து தங்கி பணிபுரிகின்றனர். அவர்கள் அனைவரையும் திரும்பி ஊருக்கு செல்ல சொல்வதா? அல்லது இங்கேயே தங்க சொல்லலாமா? என்பது குறித்து அந்தந்த கடை உரிமையாளர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

தியாகராயநகரில் கடைகள் அடைக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லை. எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் மாம்பலம் ரெயில் நிலையத்திலும் கூட்டம் குறைந்து இருந்தது.

கோயம்பேடு பஸ் நிலையம்

இதுதவிர, மக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் குறைந்திருந்தது. மக்கள் பொழுது போக்கு இடங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் அதிகம் இயக்கப்படுகின்றன. நேற்று வழக்கத்தை விட அந்த மாநகர பஸ்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது. அதேபோல், வெளியூர்களுக்கு செல்லும் விரைவு பஸ்களிலும் மக்கள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. மக்கள் கூட்டம் குறைந்து இருப்பதால், பஸ் சேவையையும் சூழ்நிலைக்கு ஏற்ப குறைக்க போக்குவரத்து துறை முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் உதவி மையமும் அமைக்கப்பட்டு, பயணிகளுக்கு பரிசோதனையும் செய்யப்படுகிறது.

மக்கள் நடமாட்டம் குறைந்ததால், கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஆட்டோ ஓட்டும் டிரைவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்