வேலூர் மாவட்டத்தில் குறைதீர்வு கூட்டங்கள், மனுநீதிநாள் முகாம்கள் ரத்து - கலெக்டர் சண்முகசுந்தரம் தகவல்

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் வேலூர் மாவட்டத்தில் குறைதீர்வு கூட்டங்கள், மனுநீதிநாள் முகாம்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-18 07:15 GMT
வேலூர்,

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டது.

வேலூர் மாவட்டத்தில் கோவில் திருவிழாக்கள், பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், காளைவிடும் திருவிழா ஆகியவை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அடிக்கடி கைகளை கழுவ அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், கோவில், மக்கள் கூடும் இடங்களில் பொதுமக்கள் கைகழுவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைதோறும் நடக்கும் மக்கள் குறைதீர்வுநாள் கூட்டம், வெள்ளிக்கிழமைதோறும் நடக்கும் அம்மாதிட்ட முகாம்கள், மனுநீதிநாள் முகாம்கள், விவசாயிகள் குறைதீர்வுநாள் கூட்டங்கள் அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந் தேதிவரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா சம்பந்தமாக பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்