நெல்லையில் தனியார் நிதி நிறுவன மேலாளருக்கு கத்திக்குத்து வாலிபர் கைது
நெல்லையில் தனியார் நிதி நிறுவன மேலாளரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
நெல்லை,
நெல்லையில் தனியார் நிதி நிறுவன மேலாளரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தனியார் நிதி நிறுவன மேலாளர்
நெல்லை மேலப்பாளையம் ராஜாநகரை சேர்ந்தவர் இசக்கிபாண்டி (வயது 26). இவர், ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்தார். இந்த நிதி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதால், அந்த நிறுவனம் மூடப்பட்டது. இது தொடர்பாக உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் 5 பேர் கொண்ட கும்பல் இசக்கிபாண்டி வீட்டுக்கு வந்தது. அவர்கள் நிதி நிறுவன உரிமையாளர் இருப்பிடம் கேட்டு விசாரித்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கத்திகுத்து
இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், இசக்கி பாண்டியை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றது. தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள், இசக்கி பாண்டியை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் மதுரை மாவட்டம் தத்தனேரி கீழ வைத்தியநாதபுரத்தை சேர்ந்த நாகராஜன் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.