பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது; திரையரங்குகள் மூடப்பட்டன
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் போக்குவரத்து கழகத்தின் சார்பில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் திரையரங்குகளும் மூடப்பட்டன.
புதுக்கோட்டை,
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து மீள தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கலெக்டர் உமா மகேஸ்வரி அரசு மற்றும் தனியார் பஸ்களில் கிருமி நாசினி வைக்க வேண்டும். தினமும் காலை மாலை என இருவேளையும் பஸ்களை சுத்தப்படுத்தி கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.
இதையடுத்து கலெக்டர் உமா மகேஸ்வரி உத்தரவின்படி, நேற்று புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பயணிகள் கை கழுவும் முறையை கடைபிடிக்க வேண்டும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் வலியுறுத்தினார்கள்.
மேலும் தமிழக அரசின் உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டன. ஆனால் அங்கன் வாடி மையங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு 15 தினங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, முட்டை ஆகியவற்றை குழந்தைகளின் பெற்றோர்களை அழைத்து அவர்களிடம் அதனை கொடுத்து கையொப்பம் பெற்று கொண்டனர். இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளும் மூடப்பட்டு உள்ளன.
இதேபோல இலுப்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரி அறிவுறுத்தலின்படி, இலுப்பூர் பேரூராட்சி பணியாளர்கள் இலுப்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான பஸ் நிலையம், வழிப்பாட்டு தலங்கள், வாடகை வாகனங்கள் நிறுத்தும் இடங்கள், மருத்துவமனைகள் உள்பட பல இடங்களை சுத்தம் செய்து அந்த இடங்களில் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.
பொன்னமராவதியில் உள்ள போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள பஸ்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.