முதல்-அமைச்சரை ஓவியமாக வரைந்த மாணவனுக்கு பாராட்டு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு நேர்எதிரே பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த பள்ளி மாணவன், ஒரு படத்தை அடிக்கடி உயர்த்தி காண்பித்தான்.

Update: 2020-03-14 22:20 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே ஒடுக்கத்தில் நேற்று நடைபெற்ற அரசு மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு நேர்எதிரே பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த பள்ளி மாணவன், ஒரு படத்தை அடிக்கடி உயர்த்தி காண்பித்தான். இதனால் முதல்-அமைச்சரின் கவனம் அங்கு செல்ல, அதையடுத்து அனைவரும் அங்கு பார்த்தனர்.

அங்கு முதல்-அமைச்சரை ஓவியமாக வரைந்து, அந்த மாணவன் கையில் வைத்து இருந்தான். அதை பார்த்ததும் பார்வையாளர்கள் மத்தியில் பலத்த ஆரவாரம் எழுந்தது. இதற்கிடையே தனது பேச்சை முடித்த முதல்-அமைச்சர், மாணவனை மேடைக்கு அழைத்தார். உடனே அந்த மாணவனும் உற்சாகமாக ஓவியத்துடன் மேடைக்கு வந்தான். அவனிடம் முதல்-அமைச்சர் விசாரித்தார். அப்போது அவன் தனது பெயர் கவின் என்றும், அது தான் வரைந்த ஓவியம் என்றும் கூறினான்.

மேலும் முதல்-அமைச்சரின் உருவத்தை, அவன் தத்ரூபமாக வரைந்து இருந்தான். இதனால் அவனின் ஓவியத் திறமையை முதல்-அமைச்சர் வெகுவாக பாராட்டினார். மேலும் மாணவனை ஊக்கப்படுத்தும் வகையில் பணமுடிப்பு வழங்கினார். அப்போது அனைவரும் பலத்த கரகோ‌‌ஷம் எழுப்பியதால், அந்த இடமே அதிர்ந்தது.

மேலும் செய்திகள்