கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு விரிவாக்கம் டீன் தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்களின் வசதிக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு விரிவாக்கம் செய்யப்படுகிறது என்று அரசு மருத்துவக்கல்லூரி டீன் வள்ளி கூறினார்.

Update: 2020-03-14 22:15 GMT
திருப்பூர்,

பின்னலாடை தொழில் நகரான திருப்பூருக்கு வர்த்தகம் தொடர்பாக பல்வேறு வெளிநாட்டினர் அதிகம் வந்து செல்வது வழக்கம். வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் பரவுவதை தொடர்ந்து அங்கிருந்து இந்தியா வருபவர்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. தொழில் நிமித்தமாக அந்த மாநிலத்துக்கு சென்று விட்டு திருப்பூருக்கு திரும்பி வருபவர்களும் இருக்கிறார்கள். இதனால் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் திருப்பூர் மாவட்ட மருத்துவப்பணிகள் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. திருப்பூர் வரும் ரெயில் பயணிகள் முக கவசம் அணிந்தபடியும், கைக்குட்டையை முகத்தில் கட்டியபடியும் வருகிறார்கள்.

திருப்பூர் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி பெரிச்சிப்பாளையத்தில் உள்ளது. இங்கு 2 அறைகளில் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்க, திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரியில் 4 அறைகள் கொண்ட கட்டிடம் தயார்படுத்தப்பட்டுள்ளது. இங்கு பொதுமக்களிடையே நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லூரி டீன் வள்ளி கூறும்போது, ‘திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 4 அறைகளுடன் 8 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் தயார்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அறிகுறியுடன் உள்ளவர்கள் சிகிச்சை பெறும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுவாச கருவி, நோய் பரிசோதனை உள்ளிட்ட வசதிகளுடன் சிறப்பு வார்டு தயாராக இருக்கிறது. தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டுகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அதற்கான பணிகள் விரைந்து நடக்கிறது. இதுவரை திருப்பூரில் கொரோனா பாதிப்பு இல்லை. இருப்பினும் தயார் நிலையில் மருத்துவக்குழுவினர் உள்ளனர்’ என்றார்.

மேலும் செய்திகள்