குடிமங்கலம் பகுதியில் ஒரு கிலோ பீட்ரூட் 4 ரூபாய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

குடிமங்கலம் பகுதியில் ஒரு கிலோ பீட்ரூட் 4 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Update: 2020-03-14 22:15 GMT
குடிமங்கலம்,

கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட குளிர் பிரதேசங்களில் பீட்ரூட் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.இது தவிர சமவெளி பகுதிகளிலும் சாகுபடி செய்யும் வகையிலான புதிய ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.இதனால் குடிமங்கலம் பகுதியில் அதிக அளவில் பீட்ரூட் சாகுபடி நடைபெற்று வருகிறது.

குடிமங்கலம் பகுதியில் அதிக அளவில் வாய்க்கால் பாசனத்தில் பீட்ரூட் சாகுபடி நடைபெறுகிறது. தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் தண்ணீர் சிக்கனத்தை கருத்தில் கொண்டு சொட்டுநீர்ப்பாசனத்தில் பீட்ரூட் சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பொதுவாக பீட்ரூட் சாகுபடியில் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு வசதியாக வெவ்வேறு காலங்களில் அறுவடை செய்யும் வகையில் சில நாட்கள் இடைவெளி விட்டு விதைப்பது வழக்கம்.ஆனால் தற்போது வியாபாரிகள் விளைநிலங்களிலேயே வந்து பீட்ரூட்டை வாங்கிச்செல்வதால் ஒரே நேரத்தில் அறுவடை செய்யும் விதத்திலேயே விதைக்கப்படுகிறது.

பீட்ரூட் 80 முதல் 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும் என்பதால் விவசாயிகள் விரும்பி பயிரிடுகின்றனர்.இதனால் வரத்து அதிகரித்து உரிய விலை கிடைக்காத நிலை ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து குடிமங்கலம் பகுதியில் பீட்ரூட் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயி ஒருவர் கூறியதாவது:-

குடிமங்கலம் பகுதியில் கிணற்றுப்பாசனம் மூலம் பீட்ரூட் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம்.ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய 2 கிலோ விதை தேவைப்படுகிறது. உழவு,களையெடுத்தல்,உரமிடுதல் மருந்து தெளித்தல்,அறுவடை செய்தல் என ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது.

பீட்ரூட் கோடை காலங்களில் மகசூல் குறைந்தும் குளிர் காலங்களில் மகசூல் அதிகரித்தும் காணப் படும்.ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 10 டன் வரை மகசூல் கொடுக்கும்.கடந்த காலங்களில் ஒரு கிலோ பீட்ரூட் சராசரியாக ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது விலை சரிந்து அதிக பட்சமாக ரூ.4-க்கு மட்டுமே விற்பனையாகிறது. வியாபாரிகள் நேரடியாக தோட்டங்களுக்கு வந்து பீட்ரூட்டை அறுவடை செய்து,கழுவி சுத்தம் செய்து,பைகளில் அடைத்து எடை போட்டு எடுத்து செல்கிறார்கள். இங்கு உற்பத்தி செய்யப்படும் பீட்ரூட் உடுமலை,பொள்ளாச்சி மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவிற்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.தற்போது பறவைக்காய்ச்சல் பீதி காரணமாக கேரளாவுக்கு பீட்ரூட் அதிக அளவில் கொண்டு செல்லப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.இதனால் விலை சரிந்து போதுமான விலை கிடைக்காத நிலை உள்ளது.கோடைகாலம் என்பதால் மகசூல் குறைந்து உள்ள நிலையில் விலையும் சரிந்து உள்ளது .இதனால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்