நாங்குநேரியில் பயங்கரம் ஓட்டல் உரிமையாளர்– தொழிலாளி வெட்டிக் கொலை மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

நாங்குநேரியில் நேற்று ஓட்டல் உரிமையாளர் மற்றும் தொழிலாளி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

Update: 2020-03-14 22:00 GMT
நாங்குநேரி, 

நாங்குநேரியில் நேற்று ஓட்டல் உரிமையாளர் மற்றும் தொழிலாளி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொழிலாளி வெட்டிக் கொலை 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவர் நாங்குநேரி மெயின் பஜாரில் ஓட்டல் நடத்தி வந்தார். இவரது ஓட்டலில் அவருடைய உறவினர் மணிமுத்தாறு பகுதியை சேர்ந்த சுரேஷ் (25) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று இரவு 7.30 மணி அளவில் 7 பேர் கொண்ட கும்பல் ஒரு காரில் ஓட்டல் முன்பு வந்து இறங்கியது. பயங்கர ஆயுதங்களுடன் திடீரென ஓட்டலுக்குள் புகுந்தது. அங்கிருந்த ஆறுமுகத்திடம் தகராறு செய்தது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த அரிவாளை எடுத்து ஆறுமுகத்தை வெட்ட முயன்றது. இதனால் ஆறுமுகம் கடையில் இருந்து வெளியே ஓடினர். ஆனாலும் அந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டியது. அப்போது சுரேஷ் ஓடி வந்து இதனை தடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் அவரையும் சரமாரியாக வெட்டியது. இதனால் ஆறுமுகம், சுரேஷ் ஆகிய இருவரும் நிலை குலைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உரிமையாளரும் சாவு 

பின்னர் மர்ம கும்பல் அங்கிருந்து உடனடியாக காரில் தப்பிச் சென்றது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் நாங்குநேரி போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சு மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில், ஆறுமுகத்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார்.

நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இச்சம்பவத்தை தொடர்ந்து நாங்குநேரி பஜார் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. இதனால் ஆறுமுகத்தின் ஓட்டல் அருகே உள்ள கடைகள் மட்டும் அடைக்கப்பட்டன. போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அது அங்கிருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் வரை ஓடியது. பின்னர் அங்கிருந்து திரும்பியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. பயங்கரமாக நடந்த இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

முன்விரோதம் 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நெல்லை டவுனில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த மறுகால்குறிச்சியை சேர்ந்த புதுமாப்பிள்ளை நம்பிராஜன் (23) கொலையில் ஆறுமுகத்தின் மகன் செல்லத்துரைக்கு தொடர்பு உள்ளதாகவும், இந்த முன்விரோதம் காரணமாக பழிக்குப்பழியாக இந்த இரட்டை கொலை நடந்திருப்பதும் தெரிகிறது. மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்