ரூ.5 கோடியில் தாவரவியல் பூங்கா அமைக்கும் பணிகள்; கலெக்டர் ஆய்வு

ஏலகிரிமலையில் ரூ.5 கோடியில் தாவரவியல் பூங்கா அமைக்கும் பணிகளை கலெக்டர் சிவன் அருள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2020-03-14 22:30 GMT
ஜோலார்பேட்டை,

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரிமலையில் சுற்றிப் பார்ப்பதற்கு பல்வேறு இடங்கள் இருந்தாலும், தற்போது அங்குள்ள சில இடங்கள் சிதிலமடைந்து பயனற்ற நிலையில் இருந்து வருகிறது. திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்ட நிலையில், ஏலகிரிமலை சுற்றுலா தலத்தை மேம்படுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர் ம.ப.சிவன்அருள் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கவும், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பல்வேறு இடங்களை மேம்படுத்தும் பணிகளை தீவிரமாக மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது.

ஏலகிரிமலையில் உள்ள மேட்டுக்கனியூர், பள்ளக்கனியூர், கோட்டூர், நிலாவூர் ஆகிய கிராமங்களுக்கு இடையே 81.45 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்கான பணி மேற்கொள்ள ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து தாவரவியல் பூங்கா அமைப்பதற்காக நடைபெற்று வரும் பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் ம.ப.சிவன்அருள் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் கோடை விழா நடத்துவதற்காக தற்காலிக மேடை அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது நிரந்தர கோடை விழா மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு குடிநீர் வசதி, கழிவறை வசதி, மின் வசதி செய்யப்பட்டுள்ளதா? என்றும், இயற்கை பூங்காவில் உள்ள பல்வேறு பராமரிப்பின்றி கிடக்கும் இடங்களையும், சுற்றுலாப் பயணிகள் அதிகமாக விரும்பி செல்லும் புங்கனூர் படகுத் துறையையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பல்வேறு இடங்களை மேம்படுத்துவதற்கும், புங்கனூர் படகுத்துறையை சுற்றி பாதுகாப்பு சுற்றுச்சுவர் அமைத்தல், தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும் அவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

ஆய்வின் போது, திருப்பத்தூர் தாசில்தார் அனந்தகிரு‌‌ஷ்ணன், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அருண், ஜோலார் பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார், கிராம நிர்வாக அலுவலர் மஸ்தான் உள்பட துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்