அறந்தாங்கி கரும்பு விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம்

தனியார் சர்க்கரை ஆலை உரிமம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அறந்தாங்கி கரும்பு விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது.

Update: 2020-03-14 22:30 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை இந்த ஆண்டில் இருந்து தொழிற்சாலை உரிமம் ஒப்படைக்கப்பட்டதன் அடிப்படையில் உரிமம் ரத்து செய்யப்பட்டு, சர்க்கரை ஆலை இயங்காது என அந்த நிர்வாகம் கடிதம் மூலமாக தெரிவித்ததை தொடர்ந்து அறந்தாங்கி கரும்பு விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் 2019-20 அரவை பருவத்திற்கு தனியார் சர்க்கரை ஆலை பதிவு செய்த கரும்பினை வருகிற 31-ந் தேதிக்குள் கரும்பு வெட்டி புகழூர் தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்பப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதற்கு தனியார் சர்க்கரை ஆலை துணை பொது மேலாளர் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் முடிப்பதற்கு உறுதி அளித்தார்.

புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள அனைத்து கரும்புகளும், கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள மீனம்பட்டி, வலங்கொண்டான்விடுதி வருவாய் கிராமம் பகுதிகளில் 2020-21-ம் ஆண்டு அரவை பருவத்திற்கு நடப்பட்ட கரும்பு, மறுதாம்பு பயிர் மற்றும் இனிமேல் நடப்படும் கரும்பு, வரும் மறுதாம்பு கரும்பினை தஞ்சாவூர் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு சப்ளை செய்ய விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் திருவரங்குளம், அரிமளம், குன்றாண்டார் கோவில், அன்னவாசல், விராலிமலை, அறந்தாங்கி ஒன்றியம் மற்றும் கறம்பக்குடி ஒன்றியத்தில் மழையூர் வருவாய் கிராமம் பகுதிகளில் உள்ள கரும்புகள் திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கோத்தாரி சர்க்கரை ஆலை காட்டூருக்கு கரும்பு வெட்டி அனுப்ப விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் உமா மகேஸ்வரி பேசுகையில், விவசாயிகளின் கோரிக்கையினை பரிந்துரை செய்து சர்க்கரைத்துறை ஆணையருக்கு உடன் அனுப்பி, கரும்பு நடவு பணியினை ஊக்குவிக்கப்படும் என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன், வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ்பாபு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்புராஜ் உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் கரும்பு விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்