நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்
அன்னமங்கலம், அரசலூர், விசுவக்குடி, முகம்மதுபட்டினம் ஆகிய கிராமங்களில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இணைந்து அன்னமங்கலம், அரசலூர், விசுவக்குடி, முகம்மதுபட்டினம் ஆகிய கிராமங்களில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமை 7 நாட்கள் நடத்தின. இந்த முகாமில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ- மாணவிகள் சார்பில் பொது சுகாதாரம், மரக்கன்று நடுதல் மற்றும் இந்து கோவில்கள், முஸ்லிம் பள்ளிவாசல், கிறிஸ்தவ தேவாலயங்கள் ஆகிய வளாகங்களில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
மேலும் விசுவக்குடி கிராமத்தில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பேரணி நாட்டு நலப்பணித் திட்ட மாணவ- மாணவிகள் சார்பில் நடைபெற்றது. தொடர்ந்து முகாமின் நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சிவனேசன் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் சேகர் முன்னிலை வகித்தார். முன்னதாக மாணவி வினிதா வரவேற்று பேசினார். முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முத்துராஜ் சிறப்பு முகாமின் அறிக்கையை வாசித்து நன்றி கூறினார்.