பெரம்பலூர் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 6-வது பட்டமளிப்பு விழா பாரதிதாசன் அரங்கில் நேற்று நடந்தது.
பெரம்பலூர்,
பட்டமளிப்பு விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் கணேசன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப் பினர் ரகுநாதன் கலந்து கொண்டு முதுநிலை, இளநிலை பாடப்பிரிவுகளில் இருந்து மொத்தம் 691 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
இதில் 2015-18 மற்றும் 2016-19-ம் கல்வி ஆண்டுகளில் தேர்ச்சியுற்ற 14 இளநிலை பாடப்பிரிவுகளில் இருந்து 530 மாணவ- மாணவிகளும், 5 முதுநிலை பாடப்பிரிவுகளில் இருந்து 161 மாணவ-மாணவிகளும் பட்டம் பெற்றனர். விழாவில் கல்லூரியில் உள்ள அனைத்துத்துறை தலைவர்கள் பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.