சாலையை விரிவுபடுத்த கோரி கடையடைப்பு போராட்டம்; வர்த்தகர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பம்மம் முதல் வெட்டுமணி வரை சாலையை விரிவு படுத்த வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடத்த போவதாக வர்த்தகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குழித்துறை,
மார்த்தாண்டம் தொழில் வர்த்தகர் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் அல் அமீன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுந்தர்ராஜ் வரவேற்று பேசினார். செயலாளர் ராஜ செல்வின்ராஜ் அறிக்கை படித்தார். பொருளாளர் அலக்சாண்டர் வரவு–செலவு அறிக்கை சமர்பித்தார்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:–
மார்த்தாண்டத்தில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலை அகலம் குறைவாக உள்ளதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த சாலையில் வாகனங்கள் செல்லும் போது நடந்து செல்லும் பொதுமக்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு செல்ல வேண்டிய நிலையுள்ளது. எனவே பம்மம் முதல் வெட்டுமணி வரை மேம்பாலத்தின் கீழே உள்ள சாலையை போதிய அளவில் விரிவுபடுத்தி அனைத்து பஸ்களும் மோம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மார்த்தாண்டம் தொழில் வர்த்கர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டமும், கடையடைப்பு போராட்டமும் நடத்தப்படும்.
மார்த்தாண்டம் அட்டைகுளம் பகுதி மீண்டும் குப்பைகளால் நிரம்பி தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த பகுதியை சீரமைத்து மினி விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும்.
உள்ளாட்சி மன்றங்கள் எந்த விதமான தூய்மைப் பணிகளும் செய்யாமல் திடக்கழிவு மோலண்மை நிதி வசூல் செய்வதை நிறுத்த வேண்டும். பி.எஸ்.என்.எல் தொலைத் தொடர்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் அதனை சீர் செய்ய வேண்டும், ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், மார்த்தாண்டம் நகைக்கடை கொள்ளை வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து நகைகளை மீட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர்கள் எபிராஜ், தேவராஜ், சாதிக், ரமேஷ், மத்தியாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை செயலாளர் பாபு நன்றி கூறினார்.