உய்யகொண்டான் வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட வாழை விவசாயிகள்
உய்யகொண்டான் வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு வாழை விவசாயிகள் திடீரென போராட்டம் நடத்தினர்.
திருச்சி,
வயலூர், குழுமணி மற்றும் சோமரசம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் காவிரி ஆற்று தண்ணீரை நம்பி 5 ஆயிரம் ஏக்கர்களுக்கு மேல் வாழை சாகுபடி செய்துள்ளனர். தற்போது வாழைத்தார்கள் சில நாட்களில் அறுவடை செய்யும் நிலையில் உள்ளன.
இந்தநிலையில் காவிரியில் இருந்து பிரியும் கிளை வாய்க்காலான உய்யகொண்டான் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடுவதை திருச்சி பொதுப்பணித்துறை ஆற்றுப்பாசன செயற்பொறியாளர் அலுவலக அதிகாரிகள் நிறுத்தி விட்டனர். இதையடுத்து உய்யகொண்டான் வாய்க்காலில் வாழை சாகுபடிக்கு போதிய தண்ணீர் திறந்துவிடும்படி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த வாழை விவசாயிகள் தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் தலைமையில் நேற்று காலை திருச்சியில் உள்ள பொதுப்பணித்துறை ஆற்றுப்பாசன கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து திடீரென முற்றுகையிட்டனர். பின்னர், செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, விவசாயிகள் தங்களது கைகளில் கோரிக்கைகள் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்திருந்தனர். வாடும் வாழையை காப்பாற்ற உய்யகொண்டான் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடு என்றும், விவசாயத்தை அழிக்காதே என்றும், குடி நீருக்கும் கால்நடைகளுக்கும் உய்யகொண்டான் வாய்க் காலில் தண்ணீர் திறந்து விடு என்பன போன்ற வாசகங்கள் அந்த பதாகைகளில் எழுதப்பட்டு இருந்தது.
இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை, பொதுப்பணித்துறை ஆற்றுப்பாசன கோட்ட செயற்பொறியாளர் பாஸ்கர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், ‘உய்யகொண்டான் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடாமல் இருப்பதற்கு காரணம், சில இடங்களில் குடிமராமத்து பணிகள் நடந்து வந்தது. இனி அப்பணிகளை நிறுத்தி விட்டு, நாளை(ஞாயிற்றுக்கிழமை) அல்லது நாளை மறுநாள் (திங்கட் கிழமை) அன்று உய்யகொண்டான் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, போராட்டத்தை கைவிடுங்கள்’ என்றார். அதை ஏற்று விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் கூறுகையில், ‘வாழைகள் வாடுவதை தடுக்கும் வகையில் அதிகாரிகள் திங்கட்கிழமைக்குள் உய்யக்கொண்டான் வாய்க்காலில் தண்ணீர் வரும் என்ற உத்தரவாதம் அளித்துள்ளனர். அதை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது. சொன்னபடி திங்கட்கிழமை உய்ய கொண்டான் வாய்க்காலில் தண்ணீர் வரவில்லை என்றால் அன்றைய தினமே திருச்சி-கரூர் பை-பாஸ் சாலை சோமரசம்பேட்டையில் பஸ் மறியல் போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.