ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளை பார்க்க அதிக உறவினர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் கலெக்டர் மெகராஜ் வேண்டுகோள்

ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளை பார்க்க அதிக உறவினர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், இது தொடர்பாக டாக்டர்கள் அறிவுறுத்த வேண்டும் என்றும் கலெக்டர் மெகராஜ் வேண்டுேகாள் விடு்த்துள்ளார்.

Update: 2020-03-13 22:36 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) டாக்டர் சோமசுந்தரம், இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) டாக்டர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக கொரோனா வைரஸ் அறிகுறிகள், பரவும் விதம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் கலெக்டர் மெகராஜ் பேசியதாவது:-

ஆஸ்பத்திரிகளுக்கு வருபவர்கள் கைகளை கழுவிய பிறகு உள்ளே வருவதற்கு ஏதுவாக ஆஸ்பத்திரியின் முன்பு கிருமிநாசினியுடன் கூடிய கைகழுவும் இடம் ஏற்படுத்த வேண்டும். நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் கைகளை கழுவிய பிறகே ஆஸ்பத்திரிக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும். மேலும் வெளியே செல்லும் போதும் கைகளை கழுவ அறிவுறுத்த வேண்டும். அதற்கான அறிவிப்பு பலகையை வைப்பதோடு, அதை கண்காணிக்க நுழைவுவாயிலில் ஒருவரை பணி அமர்த்த வேண்டும்.

பஸ் நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களை விட ஆஸ்பத்திரிகளில் மிக கவனமாக இருக்க வேண்டும். எனவே ஆஸ்பத்திரிகளில் உள்ள நோயாளிகளை காண அதிக அளவில் உறவினர்கள் வருவதை தவிர்க்க வேண்டும். இதை ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டர்கள் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களிடம் அறிவுறுத்த வேண்டும். அதிக அளவில் மக்கள் பயன்பாடு உள்ள இடங்கள் கிருமிநாசினியை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். சந்தேகப்படும் அறிகுறியுடன் நோயாளி யாரேனும் சிகிச்சைக்கு வந்தால் உடனடியாக மாவட்ட சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆலோசனை கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த கலெக்டர் மெகராஜ் கூறியதாவது:-

ஆஸ்பத்திரிகளில் அதிகமான நோயாளிகள் இருப்பதாலும், நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதாலும் கை படக்கூடிய இடங்கள், ஜன்னல், மேஜை இருக்கைகளை சுத்தமாக வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 1½ மாதமாக வெளிநாடுகளில் இருந்து 72 பேர் வந்து உள்ளனர். அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்தனர். அவர்களில் யாருக்கும் காய்ச்சல் அறிகுறிகள் இல்லை. அதில் 36 பேர் வெளிநாட்டில் இருந்து வந்து 28 நாட்களுக்கு மேலாகிவிட்டதால் அவர்களை தவிர்த்து, 36 பேர் தினசரி கண்காணிப்பில் உள்ளனர்.

வெளிமாநிலங்களுக்கு சென்று வரும் டிரைவர்கள் மற்றும் கிளீனர்களுக்கு இருமல், காய்ச்சல், தும்மல் மற்றும் உடல்வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கும்படி லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கோழிப்பண்ணையாளர் சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்